ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச – பூமிகன்

ஐதேக அமைக்கும் மெகா கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும். ரணில் – சஜித் மோதல் இதில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. நெருக்கடி மோசமடைந்து – தான் களமிறங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டால், கரு ஜயசூரியவை களமிறக்கிவிட்டு, தான் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திட்டத்துடன் ரணில் செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் களத்தில் நிமிடத்துக்கு நிமிடம் மாற்றங்கள் நிகழ்கின்றன. அடுத்ததாக என்ன நடக்கும் எனச் சொல்லமுடியாத நிலை உருவாகியிருக்கின்றது. ரணில் – சஜித் மோதல் குறித்து கடந்த வாரமும் இந்தப் பகுதியில் பார்த்தோம். இரு தரப்பினருமே விட்டுக்கொடுப்பதில்லை என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள். கட்சியின் பாராளுமன்றக்குழு கடந்த வாரம் கூடியபோதும் இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டிருந்தது. கட்சியின் செயற்குழு கடந்த திங்கட்கிழமை கூடியபோதும் இதே பிரச்சினைதான் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

கட்சிக்குள் சஜித்துக்கான ஆதரவு அதிகரித்திருப்பதை அவதானித்த ரணில், நிலைமைகளைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவதற்கு மற்றொரு உபாயத்தைக் கையாண்டார்.

சனாதிபதி வேட்பாளர் தெரிவை ஐ.தே.க. மேற்கொள்ளாது, அதன் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கும் ஜனநாயக தேசிய முன்னணி மூலம் அந்தத் தெரிவை மேற்கொள்ளலாம் என்பதுதான் அவரது திட்டம். ஐ.தே.மு.வில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளும் இணைந்துகொள்ளும். அவை தன்னை ஆதரிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த உபாயத்தை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ரணில் முன்வைத்தார்.Ranil Group ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச - பூமிகன்

புதிய கூட்டணியில் தனக்கு இசைவான நிலையை ஏற்படுத்தும் வகையில் அதன் யாப்பு விதிகளையும் தயாரிக்க ரணில் முயன்றதாகச் சொல்லப்படுகின்றது. இப்போது கட்சியில் புயலை ஏற்படுத்தியிருப்பது அதுதான். புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்கு கட்சியின் செயற்குழு அங்கீகாரமளித்திருக்கின்றது. ஆனால், அதற்காக ரணிலால் தயாரிக்கப்பட்டிருக்கும் யாப்பு விதிகளைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது என சஜித் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

ரணிலின் திட்டத்தின்படி பத்து உறுப்பினர்களைக் கொண்ட தலைமைத்துவச் சபை ஒன்று அமைக்கப்படும். கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அதில் இடம்பெறுவார்கள். ஐ.தே.க.வில் இல்லையென்றாலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜிதவும் தலைமைத்துவக் குழுவில் இடம்பெறுவார்.

கூட்டணியின் செயலாளர் பதவியை தன்னுடைய விசுவாசியான ராஜிதவுக்குக் கொடுப்பதுதான் ரணிலின் திட்டம். கூட்டணியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்த தலைமைத்துவக் குழுவுக்கே இருக்கும். சஜித், கரு யாரும் இதில் இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்தத் தலைமைத்துவக் குழுவை அமைப்பதற்கு ரணில் முற்பட்டிருக்கும் நிலையிலேயே சஜித் தரப்பு கொதித்தெழுந்திருக்கின்றது.

ரணிலின் இந்த முயற்சிக்கு சஜித் தரப்பு ஒரேயடியாக ஆப்பு வைத்துவிட்டது. “சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ‘கூட்டணி’ ஒன்றை அமைப்பதற்கு நாம் ஆதரவளிப்போம். ஆனால், சனாதிபதி வேட்பாளர் தெரிவை அதற்கு முன்னர் நாம் முன்னதாக மேற்கொள்வோம்” என சஜித் தரப்பு தெரிவித்தது. அத்துடன், கூட்டணியின் செயலாளர் பதவியும் ஐ.தே.க.வின் வசமே இருக்க வேண்டும் என்பதையும் சஜித் தரப்பு உறுதியாக இருந்தது. ரணில் தன்னைப் பலப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாகவே இதனைச் செய்வதாகவும் அவர்கள் கருதினார்கள். இதனால்தான் செயலாளர் பதவியைத் தனக்குத் தரவேண்டும் என சஜித் பகிரங்கமாகவே கோரினார்.

இது குறித்து மனோ கணேசனுடன் பேசிய போது, சஜித் இவ்வாறு கூறியிருக்கின்றார். “நான் ஒருபோதும் கூட்டணிக்கு எதிரானவன் அல்ல. அப்படி ஒரு தவறான கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். உண்மையில் கூட்டணி இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் தனித்து வெல்ல முடியாது என எனக்கு மிக நன்றாக தெரியும். ஜனநாயக தேசிய கூட்டணியின் உத்தேச யாப்பின் சில சரத்துகளை திருத்த வேண்டுமெனவே நான் கூறுகிறேன். உண்மையில் ஐதேகவும், உங்களது தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய ஆகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஜனநாயக தேசிய கூட்டணியின் பொது செயலாளராக பணியாற்றக்கூட நான் தயாராக இருக்கிறேன்.”

கூட்டணியின் சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியைத் தன்னிடம் வைத்திருக்கவேண்டும் என்பதில் சஜித் அக்கறையாக இருப்பதை இது உணர்த்துகின்றது. கூட்டணியில் இணையும் கட்சிகளில் பெரும்பாலானவை ரணிலை ஆதரிக்கலாம் என்ற நிலையிலேயே, சனாதிபதி வேட்பாளரை முதலில் தெரிவு செய்வோம். கூட்டணி உடன்படிக்கையில் பின்னர் கையப்பமிடுவோம் என சஜித் அணி பிடிவாதமாக இருந்தது. கட்சிக்குள் சஜித்துக்கு அதிகளவு ஆதரவு இருப்பதும் தெரிந்தது. வேட்பாளரைத் தெரிவதற்கு செயற்குழுவில் வாக்கெடுப்பு எனப் போனால், தனக்கு ஆபத்தாகிவிடலாம் என ரணில் அஞ்சினார்.ranil and karu phot The hindu ரணில் வகுத்த புதிய வியூகம் தகர்த்தெறிந்த சஜித் பிரேமதாச - பூமிகன்

இந்தப் பின்னணியிலேயே வியாழக்கிழமை இரவு கரு ஜயசூரியவை அலரி மாளிகைக்கு அழைத்த ரணில் அவருடன் நீண்ட நேரம் தனிமையில் உரையாடியதாகச் சொல்லப்படுகின்றது. அதன்போதே கருவை சனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கான தனது விருப்பத்தை ரணில் வெளியிட்டதாகச் சொல்லப்படுகின்றது. நிறைவேற்று அதிகார சனாதிபதிப் பதவியை இல்லாதொழிப்பது என்பது அரசியலில் நீண்டகாலமாகச் சொல்லப்படும் வாக்குறுதி. அதனைச் செய்வதன் மூலம், அதிகாரமிக்க பிரதமராக தான் தொடர்ந்தும் இருப்பதுதான் ரணிலின் திட்டம். சஜித் தரப்பு கருவை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவில்லை.

அத்துடன், கூட்டணிக்கான யாப்பைத் திருத்த வேண்டும் என்பதிலும் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். இரு தரப்பினரும் வாழ்வா? சாவா? என்ற வகையில் மோதலில் குதித்திருக்கும் நிலையில், திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பின்போடப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நெருக்கடி ஐ.தே.க.வில் பாரிய பிளவு ஒன்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உருவாகியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

Leave a Reply