ரஞ்சனின் கைதை பொலிஸார் மீது சுமத்த அரசு முயற்சி: குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கைது நடவடிக்கையை இந்த அரசு பொலிஸார் மீது சுமத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்rண ராஜகருணா, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரின் அறிவுரை இல்லாமல், பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் எனக் கூறினார்.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாகப் பொதுமக்களிடையே அச்சத்தைத் ஏற்படுத்துவதற்கு தற்போதைய நிர்வாகமும் அதனுடன் இணைந்த உறுப்பினர்களும் பெயர் பெற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தற்போதைய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்றும் ஹர்rண ராஜகருணா கூறினார்.

அவ்வாறு முன்வைக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நன்மை என்றால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றன் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த அரசு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் உடனடியாக வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்குப் பல சலுகைகளை அறிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த அரசு அரசியல் பழிவாங்கல்களை நிறுத்திவிட்டு அவர்கள் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹர்rண ராஜகருணாகேட்டுக்கொண்டார்.