ரஜினி கூத்தாடி என்றால் நான் பயங்கரவாதியா…? விக்னேஸ்வரன் காட்டம்

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாரத்துக்கு ஒரு கேள்வி எனும் கேள்வி பதில் அறிக்கை ஒன்று இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அங்கு திரைப்பட ரடிகர் ரஜினியை சந்தித்திருந்தார். அங்கு அவர் ரஜினியை சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைத்ததாகவும் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் பல விடயங்கள் பேசப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் அவ்வாறு ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பல விடயங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

ரஜினியை தெலுங்கன், சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்றெல்லாம் கூறுபவர்கள் அவரைச் சென்று ஒருமுறை சந்தித்து வாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். அப்போது அவரின் உயரிய பண்புகள் தெரியவரும்.

என்னையும்தான் தெற்கில் தாறுமாறாக விமர்சிக்கின்றார்கள். இனவாதி என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். கலவரத்தை உண்டாக்க எத்தனிக்கும் ஓர் கயவன் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அதைச் சரி என்று வடக்கில் உள்ளவர்கள் கூறுவார்களா? ஒவ்வொருவர் பார்வையில்த்தான் வெளி உலகம் அவர்களுக்கு தென்படுகின்றது.

சிலர் நான் நீதியரசராக இருந்தவர், ஒரு சினிமாக் காரரைச் சென்று சந்தித்தது தவறு என்று கூறுகின்றார்கள். நாளை ரஜனி அவர்கள் பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தால் அப்போதும் அவரை திரைக் கூத்தாடி என்று தான் கூறுவீர்களா?

ரஜினியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அவருடன் எம்முடைய சந்திப்பு முடிந்ததும் தானே என்னுடன் வந்து நான் ஏறியதும் என் கார் கதவைச் சாத்தி வழி அனுப்பி வைத்தார். அந்தச் சிறந்த மனிதரின் அறிமுகத்தை, சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.