யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய நிலை

553 Views

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தின் போது திறந்து வைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையிலான பயணிகள் விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க மற்றும் குடிவரவு அதிகாரிகள் உட்பட 100 வரையான அதிகாரிகள், தற்போது விமான நிலையத்திலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகள் முடங்கிப் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கும் போது, “அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டுமானப் பணிகைளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்று எனது அமைச்சின் சார்பில் ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும்“ என்றார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. அதேவேளை விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாதமையால் வர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு, உணரு மற்றும் ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும் பகுதி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.

இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்ததென சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் குழுவில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்திற்கு மூன்று சேவைகளை நடத்துகின்றது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன.

ஆனால் பயணிகள் மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ, அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply