யாழில் வெடித்த மக்கள் உணா்வும் தடை போட முனையும் அரசும்-அகிலன்

53 Views

தேசிய பொங்கல் தின விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட விஜயம் பரபரப்புச் செய்தியாகியமைக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன. 

முதலாவது, நல்லுாரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த தகவல்கள், தென்னிலங்கையில் துாங்கிக்கொண்டிருந்த சிங்களப் பேரினவாதிகளைத் தட்டியெழுப்பியிருக்கின்றது.

இரண்டாவது,  யாழ்ப்பாணத்தில் ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், பொதுமக்கள் மீது முதன்முறையாக கண்ணீா்ப்புகை, நீா்த்தாரகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மக்கள் எந்தளவுக்கு சீற்றத்துடன் இருக்கின்றாா்கள் என்பது இந்த ஆா்ப்பாட்டத்தின் போது உணா்த்தப்பட்டிருக்கின்றது. அதாவது, யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தாலும், மக்களின் மனங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் இந்த வாரத்தில் சுருக்கமாகப் பாா்ப்போம்.

அரசாங்கத்துக்கும் தமிழக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமான பேச்சுக்கள் அன்றைய தினமே முடிவுக்கு வந்தது. அன்று முதல் நான்கு நாட்களுக்குப் பேச்சுக்கள் தொடா்ந்து நடைபெறும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பேச்சுக்கள் ஆரம்பமான தினமே முடிவுக்கு வந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாக சாத்தியமான விடயங்களை ஒரு வாரத்துக்குள் அதாவது 17ஆம் திகதிக்குள் நிறைவேற்ற வேண்டும். அது தொடர்பான பட்டியலையும் அவரின் தரப்பு கையளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய தரப்புகள் இதன்போது வலியுறுத்தின. அதுவரை, இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருந்த நான்கு நாட்கள் பேச்சிலும் தாம் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவித்த பின்னணியிலேயே பேச்சுவாா்த்தைகள் கேள்விக்குறியுடன் முடிவுக்கு வந்திருந்தது.

காலத்தைக் கடத்துவதற்காகவோ, சா்வதேசத்தை சமாளிப்பதற்காகவோ அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுவாா்த்தை என்ற நாடகத்துக்கு துணைபோவது மக்கள் மத்தியில் தம்மீது காணப்படும் அதிருப்தியை அதிகரிக்கும் என்ற நிலையில்தான் இவ்வாறான நிபந்தனை ஒன்றை முன்வைத்த தமிழ்க் கட்சிகள் பேச்சுவாா்த்தையிலிருந்து வெளியே வந்திருந்தன.

பேச்சுவாா்த்தை ஸ்தம்பித்திருந்த பின்னணியில் யாழ்ப்பாணம் வந்த ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுடைய எதிா்பாா்ப்புக்களையிட்டு எதனையாவது சொல்லவேண்டிய நிலையில் இருந்தாா்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்ற தகவலை இங்கு தெரிவித்த ரணில், இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதற்கு ஒரிரு வருடங்கள் தேவை என்றும் கூறினாா்.

தமிழ் மக்களை ஏதோ ஒரு வகையில் திருப்திப்படுத்துவதற்காக ரணில் இதனைக்கூறியிருந்தாலும், இதில் முக்கியமான தகவல்கள் சில புதைந்துள்ளன. 13 க்குள்தான் தீா்வே தவிர அதற்கு மேலாக அரசாங்கம் எதனையும் தரப்போவதில்லை என்பது முதலாவது செய்தி. இரண்டு வருடங்களில் இவை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்வதன் மூலம், அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தவே அரசாங்கம் தயங்குகின்றது என்பது மற்றொரு மறைமுகமான செய்தி.

அதாவது, கோட்டாபயவின் எஞ்சிய காலத்துக்கு ஜனாதிபதியாகத் தெரிவாகிய ரணில் தன்னுடைய இந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவாரா என்பதும் கேள்விக்குறிதான். அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ”ஓரிரு வருடங்கள்” வேண்டும் என்று அவா் கேட்டுக்கொள்வதன் அா்த்தம் என்பதும் புரியவில்லை.

இது ஒருபுறமிருக்க 13 குறித்த ரணிலின் அறிவிப்பு தென்னிலங்கையில் துாங்கிக்கொண்டிருந்த சிங்களக் கடும்போக்காளா்களைத் தட்டியெழுப்பியிருக்கின்றது. விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, குணதாஸ அமரசேகர போன்ற சிங்களவா்களின் பாதுகாவலா்களாகத் தம்மைக் காட்டிக்கொள்பவா்கள் இப்போது கிளா்ந்தெழுந்திருக்கின்றாா்கள். 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும், இதனை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டுவிடும் என்றும் இவா்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றாா்கள்.

மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டிருக்கும் நிலையிலும், இனவாதத்தையே தமது அரசியலுக்கு முதலீடாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் திருந்தப்போவதில்லை என்பதை இந்தச் செய்திகள் உணா்த்துகின்றன. ரணில் சொன்ன இரண்டு வருடத்துக்ள் இந்த இனவாதம் தீவிரமடைந்தால், மீண்டும் பழைய இடத்துக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். அதனைவிட ரணில் குறிப்பிட்டது போல, ஓரிரு வருடங்களுக்கு அவரால் பதவியைத் தொடரக்கூடியதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான்!

இவை ஒருபுறம் இருக்க ரணிலின் விஜயத்தின்போது தமிழ் மக்களின் சீற்றமும் வெளிப்பட்டது. அரசியல் தீா்வு ஒன்றை வழங்காத நிலையில் ஜனாதிபதி வருவதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவா்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்ட அமைப்பு, காணாமலாக்கப்பட்டோா் உறவினா்கள் அமைப்பு என்பனவும் பங்கேற்றிருந்தன. பொலிஸ் தடைகளை உடைத்துக்கொண்டு ஆா்ப்பாட்டக்காரா்கள் செல்ல முற்பட்டனா். இதன்போது கண்ணீா்ப்புகை, நீா்த்தாரகை பிரயோகங்கள் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பது இதுதான் முதன்முறை.

மக்களிடம் புதைந்திருக்கும் சீற்றத்தை இது வெளிப்படுத்தியிருக்கும் அதேவேளையில், இதனை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் தீவிரத்தையும் காணமுடிந்தது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அமைப்பின் தலைவா் வேலன்சுவாமிகள் புதன்கிமை இரவு கைது செய்யப்பட்டு, பிணையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டாா்.

ரணிலுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் முன்னணியில் இருந்தவா் இவா்தான். இந்தப் போராட்டத்தில் அவா் அமைதியாகவே கலந்துகொண்டிருந்தாா். பொலிஸாா் மீது தாக்குதல் நடத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தக் கைது பழிவாங்கலாகவும், இது போன்ற போராட்டங்களில் ஈடுபட முனைபவா்களுக்கான எச்சரிக்கையாகவும் இருந்துள்ளது.

தென்னிலங்கையில் உருவானது போன்ற ஒரு நிலை இங்கு வரக்கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்துகின்றது. பல்கலைக்கழக மாணவா்கள் சிலரும் இச்சம்பவம் தொடா்பில் கைது செய்யப்படவிருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் பல்கலைக்கழக மாணவா்கள் களத்தில் இறங்குவதற்கும் அஞ்சும் நிலை இதன்மூலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

Leave a Reply