மோல்டோவில் இருந்து பிரிந்து சென்ற ரான்ஸ்நெஸ்றியா பகுதியில் நிலைகொண்டுள்ள ரஸ்ய படையினர் மீது மோல்டோவா அரசு அச்சுறுத்தல்களை மேற்கொண்டால் மோல்டோவா மீது படை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் கடந்த வியாழக்கிழமை (1) தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டில் இருந்து ரான்ஸ்நெஸ்றியா பகுதியில் ரஸ்ய படையினர் அமைதிப்படையினராக நிலைகொண்டுள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்தவே தனது படையினர் உள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ரஸ்ய படையினர் வெளியேறவேண்டும் என மோல்டோவா தெரிவித்துவருகின்றது.
ரஸ்ய படையினர் மீதான தாக்குதல் என்பது அனைத்துலக விதிகளின் அடிப்படையில் ரஸ்யாவுடனான போராகவே கருதப்படும். 2008 ஆம் ஆண்டு தென் ஒசிறியா பகுதியில் நிலைகொண்டிருந்த ரஸ்ய படையினர் மீதான ஜோர்ஜியா மேற்கொண்ட தாக்குதலே 5 நாள் போரை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர் தென் ஒசிறியா மற்றும் அப்ஹாசியா பகுதிகளை சுதந்திர நாடுகளாக ரஸ்யா பிரகடனப்படுத்தியிருந்தது.