மியான்மரில் 400 பொது மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை

501 Views

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இதுவரை 400 பேர் வரை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் “ஆயுதமற்ற பொதுமக்களை கொல்கின்றனர்” என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டால் கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படும் என இராணுவம்  எச்சரித்த பின்பும்  ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டகாரர்கள்  வீதிகளில் குவிந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ஆகியோர் இராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

மேலும் அடுத்த ஓராண்டுக்கு இராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் சாலைகளில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது வரையில் இராணுவத்தினரின் தாக்குதலில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையர் மிஷெல் பச்செலெட்டின் கணக்குப்படி, 1,700இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மியான்மர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 29 பத்திரிகையாளர்களும் அடக்கம்.

அதே நேரம் இந்த சூழலில், மியான்மர் ராணுவத்துக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான மியான்மரிகள் அகதிகளாக தாயலாந்தில் தஞ்மடைந்து வருகின்றனர்.

அகதிகளாக வரும் மியான்மரிகளின் இந்த திடீர் வருகையை கையாளும் முதல் விதமாக தாய்லாந்து ராணுவம் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது. ஐ.நா. வின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடாக தாய்லாந்து உள்ளதால் மியான்மரிகள் கைது செய்யப்பட்டு நாடுகடத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Leave a Reply