ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை – எம்.ஏ.சுமந்திரன்

ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை உருவாகுகின்ற இந்தச் சூழ்நிலையில் பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தையும், ஊடகங்களையும் பேணிப் பாதுகாக்கின்ற பங்கு ஊடகத்துறையினருக்கு இருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இடம்பெற்ற பரிணாமம் என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வலைதளங்களில் இருக்கின்ற ஊடகங்களில் வருகின்ற செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி பலருக்கும் கேள்விகள் இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்திலே ஊடகம் மிக மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. இன்றைக்கு விசேடமாக இந்த அரசாங்கத்தின் கீழே துணிவோடு உண்மையை எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றது. ஊடக சுதந்திரம் திரும்பவும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.

ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் எப்படியாக இருந்தது என்று 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்களுக்குத் தெரியும். பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், இன்னும் பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதே நிலை இந்த  தற்போதைய ஆட்சியிலும் ஏற்பட்டுள்ளது.

மேலும் உண்மையான செய்திகளை சரியான கோணத்தோடு வெளியிடுகின்றபோது அந்த ஊடகத்திற்கும் குறித்த செய்திக்கும் ஒரு மதிப்பிருக்கும்.” என்றார்.