மாவீரர் நாளும்  தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி

755 Views

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர்.

27.11.1982 அன்று… விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள்.  தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள்.  ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான்.

தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே தமிழகத்தில் தகனம் செய்யப்பட்டது.  இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர்.  இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் நினைவு கூறப்பட்டுவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் நாள் தொடங்கப்பட்ட 1989 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்டேன்.  தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

அதன் பிறகு புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்று சுடரேற்றி உரையாற்றியிருக்கிறேன்.  2005 ஆம் ஆண்டு தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொள்கின்ற வாய்ப்பைப் பெற்றேன்.

நவம்பர் மாதம் முழுவதும் போராளிகளுக்கான ஓவியப் பயிற்சிக்காக தமிழீழத்தில் இருந்தேன். தினந்தோறும் என்னை சந்திக்கும் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஒருநாள், “மாவீரர் நாளுக்கு முன்பு ஒரு வாரம் முழுவதும் ‘மாவீரர் வாரம்’ என்று கடைபிடிக்கப் படும். நீங்களும் அதில் கலந்துகொள்ளுங்கள் அண்ணா” என்று கூறிவிட்டு அரசியல் துறையை சேர்ந்த சிலரை அழைத்து புகழேந்தி அண்ணனையும் ‘மாவீரர் பெற்றோர்கள் கவுரவிப்பு’ நிகழ்வுக்கு அழைத்துச் செல்லுங்கள் உத்தரவிட்டார்.

அந்த வாரம் தமிழீழம் முழுவதும் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. மாவீரர்களின் பெற்றோர்கள் கவுரவிக்கப் பட்டார்கள். பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகள், மக்கள் என அனைவரும் அந் நிகழ்வுகளில் உணர்வுபூர்வமாக  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நானும் அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியா உணர்வு பூர்வமான அனுபவம்.

நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு.  ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகள். பத்திரிகையாளர்களோடு சந்திப்பு என்று உறங்குகின்ற நேரத்தையும் ஓய்வெடுக்கின்ற நேரத்தையும் குறைத்து அதற்காக செலவிடுவதையே விரும்பி செய்தேன். 26.11.2005 அன்றும் அப்படித்தான். முதல் இரவு 11.00 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் அதன் பொறுப்பாளர் தமிழன்பன் (ஜவான்), அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு என்னோடு நிகழ்த்திய உரையாடல் முடிவதற்கு நள்ளிரவைக் கடந்துவிட்டது. அதன் பிறகு புலிகளின் குரல் நண்பர்களுடன் கலந்துரையாடிவிட்டு நான் தங்கவைக்கப் பட்டிருந்த ‘டாங்க் வியூ’ விடுதிக்கு வந்து உறங்கச் செல்லும் போது அதிகாலை மூன்று மணியை நெருங்கியிருந்தது.

சில மணிநேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து, வழக்கமான நடைபயிற்சியை முடித்து, புதுக் குடியிருப்பிலும் முல்லைத் தீவிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கும், நிகழ்விற்கும் ‘டாங்க் வியு’ விடுதியை விட்டு எனக்கான பசுரோ வாகனத்தில் புறப்பட்டேன். வாகனத்தில் ஏறியதும் கவனித்தேன் என்றும் இல்லாத வாறு ஓட்டுனர் போராளியிடம் துப்பாக்கி இருந்தது. கூடுதலாக ஒரு போராளியும் துப்பாக்கியுடன் வந்தார். வாகனம் டாங்க் வியுவிலிருந்து மாலதி சிலையைக் கடந்து ஏ9 சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போதே சாலைகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் இளைஞகர்களும் குழந்தைகளும் திரளாக நின்று சாலையில் செல்வோரை வழிமறித்து சர்க்கரை பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய வாகனத்தையும் நிறுத்தக் கைக் காட்டினார்கள். ஆனால் வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்த போராளி நிறுத்தவில்லை. நான் அந்தப் போராளியைத் பார்த்தேன், “தலைவருடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகின்றார்கள் மாஸ்டர்” என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கிளிநொச்சியைக் கடந்த போது அங்கிருக்கும் முருகன் கோயிலடியில் மக்கள் திரள் இன்னும் அதிகமாக இருந்தது. அங்கேயும் மக்கள் என் வாகனத்தை நிறுத்த முயற்சித்தார்கள்… வாகனம் நிற்கவில்லை. எனக்கு முன்னால் சென்ற வாகனங்கள் அனைத்தும் நின்று மக்களால் வழங்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதில் சில இயக்க வாகனங்களும் உண்டு.

பரந்தன் சந்தியை நெருங்கியபோது மக்கள் திரள் இன்னும் அதிகமாகவே இருந்தது.  யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து வருகின்றவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வருகின்றவர்கள் அல்லது அந்த பகுதிகளுக்குச் செல்கின்றவர்கள் என்று அனைவருடைய வாகனங்களும் நின்று சென்றதால் என் வாகனம் யாரும் நிறுத்தாமலே நிற்கவேண்டிவந்தது. என் வாகனத்தை நோக்கி கையில் சர்க்கரைப் பொங்கலோடு சிலர் ஓடி வந்தார்கள்….. அதற்குள் ஓட்டுனர் போராளி கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தினார்,  முன் நின்ற வாகனத்தைக் கடந்து வலது புறம் திரும்பி புதுக்குடியிருப்பு சாலையில் வேகமெடுத்தது வாகனம். எனக்கு வருத்தமாக இருந்தது. மக்கள் எவ்வளவு அன்போடும் மகிழ்வோடும் ஓடிவருகிறார்கள்… அதை நாம் மதிக்க வேண்டாமா….. என்ற உணர்வோடு ஓட்டுனர் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன்…. என் உணர்வை புரிந்துகொண்டவராக “மாஸ்டர் இன்றும் நாளையும் நாம் உங்களை கவனமாக பாதுகாக்க வேண்டியிருக்கிறது மாஸ்டர்” என்றார். கூடுதலாக போராளி வந்தபோதே நான் புரிந்து கொண்டேன் என்றேன்.

வழிநெடுகிலும் இதுபோன்றக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டே சென்றேன். வழியில் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் சென்றேன். மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்டேன்.

விசுவமடுவைக் கடந்து புதுக்குடியிருப்பின் நுழைவு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மக்கள் நின்று வாகனங்களை நிறுத்தி பொங்கல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இயக்க வாகனங்களும் சில நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றிரண்டு முக்கியப் பொறுப்பாளர்கள் தளபதிகளுக்குரியது என்று புரிந்தது. தளபதிகள் பொறுப்பாளர்கள் கூட நிறுத்தியிருக்கிறார்களே… என்றேன். “ஆம் மாஸ்டர் அது அவர்கள் பொறுப்பு. உங்களுக்கு ஏதாவது என்றால் நாங்கள் தான் பொறுப்பு” என்றார் கூடுதல் பாதுகாப்பிற்கு வந்த போராளி. உண்மைதான்.

வழியெங்கும், மக்கள் மிகவும் உணர்வோடும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் ஈடுபாட்டோடும்  எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் அமைதியோடும் கட்டுப்பாட்டோடும் தாங்கள் மிகவும் நேசிக்கும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

மக்களின் விடுதலையை மட்டுமே நேசிகின்ற ஒரு தலைவனை மக்கள் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காண்பதற்கும் உணர்வதற்கும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு அது. அவர் பிறந்த நாளை அவர் ஒருபோதும் கொண்டாடியதில்லை. தமிழீழ மண்ணில் அவர் பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்பட்டது.

அடுத்த நாள் மாவீரர் நாள். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டேன். என்னுடைய முந்தைய பல பயணங்களில் பெரும்பாலும் அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கும் சென்றிருக்கிறேன். அவற்றில் விசுவமடு துயிலுமில்லத்திற்கும் கோப்பாய் துயிலுமில்லத்திற்கும் அதிக முறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எதோ இனம் புரியாத உணர்வும் அமைதியும் எழுச்சியும் மனதில் மட்டுமல்ல உடலிலும் ஏற்படும்.

மாவீரர் துயிலும் இல்லத்தில் சமாதி ஒருபுறமும், நடு கற்கள் ஒரு புறமுமாக வைத்திருக்கிறார்கள். சமாதி என்பது உடல்கள் விதைக்கப்பட்டது. நடுகற்கள் என்பது உடல் கிடைக்காதவர்களுக்கு நடுவது.  இரண்டிலுமே அவர்களுடைய இயற்பெயர், இயக்கப் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், எந்த சமரில் எந்த தேதியில் வீரச் சாவு என்பது உட்பட அனைத்து விபரங்களும் கல்வெட்டில் பதியப்பட்டிருக்கும். மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைப்போடு கட்டமைக்கப்பட்டிருக்கும். துயிலுமில்லங்கள் அளவில் சிறியது பெரியது என்று வேறுபடுமே தவிர வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான தோற்றப் பொழிவைக் கொண்டிருக்கும்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் காலையிலிருந்தே மாவீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சகப் போராளிகள் எனப் பலரும் வருகை தந்து அவரவர்களின் மாவீரர் சொந்தங்களுக்கு பூமாலையிட்டு கண்ணீரோடு வீர வணக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

நேரம் செல்லச்செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து கட்டிப் பிடித்துக் கதறியழும் காட்சி கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைப்பதாக இருந்தது.  வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத மன உணர்வை அன்று நான் பெற்றேன்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் பதிவுசெய்யப் பட்ட உரை ஒலிபரப்பப்பட்டு முடிந்து சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்கும். குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு துயிலுமில்லமே அமைதியில் மூழ்கியது. 06.06 மணிக்கு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 06.07 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்ட அதேநேரத்தில் பெற்றோர்கள், போராளிகள், நண்பர்கள், உறவினர்கள், மாவீரர்களின் கல்லறைகளில் சுடர் ஏற்றினார்கள்.     அந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான சுடர்களோடு நான் ஏற்றிய சுடரும் ஒளிர்ந்தது.

சுடறேற்றும் சமநேரத்தில்..

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

என்ற மாவீரர் துயிலுமில்ல உறுதிப் பாடல் ஒலித்தது. அது வலியைக் கடந்து வலிமையையும் உறுதியையும் தருகின்ற உணர்வை விதைத்தது.

நிகழ்வு முடிந்து துயிலுமில்லத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு துயிலுமில்ல பகுதியில் வைத்து, ஆலய நிர்வாகத்தினர், விளையாட்டுக் கழகங்கள், பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் போன்ற மக்கள் அமைப்புகள் சூடான தேநீர், காபி, சிற்றுண்டிகள் வழங்கினார்கள்.

மாவீரர் நாளிலும் தலைவர் அண்ணன் பிரபாகரன் பிறந்த நாளிலும் தமிழகத்தில் இருந்ததற்கும், புலத்தில் இருந்ததற்கும், களத்தில் நின்றதற்கும் நிறைய வேறுபாட்டை என்னால் உணர முடிந்தது.

Leave a Reply