மாற்று நிலமோ, பணமோ, பாபர் மசூதி இருந்த இடத்திற்கு ஈடாகாது

558 Views

மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக மாற்று நிலமோ, பணமோ வழங்கினால் அது பாபர் மசூதிக்கு ஈடாகி விடாது என்று ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு தெரிவித்துள்ளது. அயோத்தி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த்  அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த்  (Jamiat Ulama-e-Hind) அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி, ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலே இருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் மசூதிக்கு மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்ளாது.

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக மாற்று நிலமோ, பணமோ வழங்கினால் அது மசூதிக்கு ஈடாகி விடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்றி தீர்வு காண்போம். தீர்ப்பு குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை  மேற்கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு 1919 இல் நிறுவப்பட்டது. மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் நிதி ரீதியாக நிலையான முஸ்லீம் அமைப்புகளில் இது ஒன்றாகும். கிலாபத் இயக்கம் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சட்டபூர்வ ஆதரவை தெரிவிக்கும் பட்சத்தில், முஸ்லீம் வழக்கறிஞர் முகம்மது உமர் என்பவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. எனினும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யும்.

Leave a Reply