மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

இன்று நாம் பார்க்கும் இடமெல்லாம் பரந்திருக்கும் மானுட சமூகங்களில், ஏற்றத்தாழ்வுகளையும், பேரினனவாதத்தையும், இனவழிப்புகளையும், பயங்கரமான நவீன ஆயுதங்களை உபயோகிக்கும் கொடூரமான போர்களையுமே  பார்க்கிறோம். மானுட சமூகமே எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்றே நாமும் நம்புகிறோம்.

நம்ப வைக்கப்படுகிறோம். ஏனைய பாலூட்டி இனங்களின் வாழ்க்கை முறைகளில் காணப்படும் படிநிலைகளும் வன்முறைகளும் மானுட சமூகங்களுக்கும் உள்ளதாக கொண்டு, மனிதர்களின் சுயநலமும் பேராசையும் எமது மரபணுக்களிலேயே உள்ளன என்று சில ஆய்வாளர்களும் முடிவு செய்திருக்கிறார்கள்.

மானுட சமூகங்கள் அரசுகளாக கட்டமைக்கப்படும் முன்னர் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தவர்கள் இதற்கு முற்றிலும் மாறான ஒரு வாழ்க்கையை விபரிக்கிறார்கள். 19ம் நூற்றாண்டு வரை இவ்வாறான முறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் சமூகங்களை, இலங்கை தீவில் வாழ்ந்த வேடர் சமூகங்கள் உட்பட, ஆதராமாக கொண்டு இவர்களின் ஆய்வுகள் செய்யப்பட்டன.

இவ்வாறு வாழ்ந்தவர்கள் சிறு உறவினர் குழுக்களாகவே வாழ்ந்தனர். நிலமும் ஏனைய பொருளாதார வளங்களும் இவர்களிடம் பொதுவுடமையாகவே இருந்தன. ஒருவருக்கொருவர் உதவுவதும் பகிர்ந்துண்பதும் சமத்துவமும் இவர்களின் வாழ்க்கை முறை. இவர்களிடம் ஆளுபவரும் ஆளப்படுபவரும் என்ற வழக்கம் இருக்கவில்லை.

HumanEvolution225millionyearsagothefirstmammalevolved மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி
65 million years ago, the first primate evolved (and the dinosaurs went extinct) 6 million years ago, the first hominid evolved (man like primate) 2 million years ago, the species Homo evolved. Homo sapiens ~ 50,000 years ago.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, பற்பல ஆயிரமாண்டுகளாக மானுட சமூகங்கள் யாவுமே இவ்வாறகத்தான் வாழ்ந்தன. தற்கால உலகில் நாம் பார்க்கும் கொடுமைகள் மானுட வரலாற்றில் மிகவும் அண்மைக் காலத்திலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது.

மானுட இனமே 100,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றிது. ஆகவே மானுட இனத்தின் வரலாற்றில் 95 வீதமான காலங்களில் மேற்சொன்ன வாழ்க்கை முறையிலேயே நாம் வாழ்ந்திருக்கிறோம். ஆகையால் மிக அண்மைக்காலத்தில் மானுட சமூகங்களில் காணப்படும் மோசமான குணாம்சங்கள் மனிதர்களின் மரபணுக்களில் உள்ளவையாக கொள்வது அபத்தம்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களில் சீவித்த மனிதகுரங்கினத்தவரே எம் முன்னோர்கள். இவர்களில் இருந்தே இரண்டு கால்களில் நடக்கும் மனிதகுரங்கின வகைகள் தோன்றின. இவ்வாறு நிலத்தில் வாழ ஆரம்பித்த மனிதகுரங்கினங்கள் ஏனைய பாலூட்டிகளை விடவும் அதிகமாக ஒத்துழைத்தே வாழ வேண்டியிருந்தது.

இவ்வாறு நிலத்தில் வாழ்ந்த மனிதகுரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றிது. மனித இனத்திற்கு ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவையானதாக இருந்தது. ஏனெனில் மனிதருக்கு, உடம்பை சூடாக வைத்திருப்தற்கு வேண்டிய தோலோ, வேட்டையாடுவதற்கு தேவையான கூரான பற்களோ, எதிரிகளிடமிருந்து தப்புவதற்கு வேகமாக ஓடுவதற்கான கால்களோ, மிகுந்த பலமோ இருக்கவில்லை. ஒத்துழைப்பதே இவர்களின் பலம்.

ஆபிரிக்காவில் தோன்றிய மானுட இனம் 90,000 ஆண்டுகளாக உலகெங்கும் பரந்தது. சென்ற இடங்களிலிருந்த, நியன்டதல் போன்ற ஏனைய மானிட இனவகைகளுடன் புணர்ந்தும் அழித்தும் அவைகளை இல்லாமல் ஆக்கியது. மத்திய கிழக்கிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றடைந்த மானுட இனம் தொடர்ந்து ஐரோப்பாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும்  பரந்தது.revisingthes மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

12,000 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவை அடைந்தது. இறுதியில் உலகெங்கும் பரந்துவிட்டது. அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேயாவிற்கும் சென்ற குழுக்கள் பல ஆயிரமாண்டுகளாக ஏனைய உலகுடன் தொடர்புகள் அற்று வாழ்ந்தன. இவர்கள் சென்ற இடங்களில் வளர்ந்த இவர்களின் கலாச்சாரங்கள் அங்குள்ள சூழல்களுக்கும் அங்கு கிடைக்கும் வளங்களுக்கும் ஏற்ப மாறி வளர்ந்தன.

சில மரபணு சாரந்த வெளித்தோற்ற குணாம்சங்கள் ,கண்களின் நிறம், தோல்நிறம், உடல் மயிர் அடர்த்தி –  வெவ்வேறு குழுக்களில் குறிப்பாக தென்பட தொடங்கின. இருந்தாலும் மானுட இனத்தின் மரபணுக்கள் மிக அதிகமாக ஒரேமாதிரியாகவே – ஒவ்வொரு குழுவுக்குள் மாறுபடுவது வெவ்வேறு குழுக்கிளில் மாறுபடுவதைவிட அதிகமாக – இருந்தது.

10,000 ஆண்டுகள் வரையும் மானுட சமூகங்கள் யாவும் சில அடிப்டை குணாம்சங்களை கொண்டிருந்தன. ஏனெனில் இவைகள் எல்லாமே இயற்கையில் கிடைக்கும் உணவை தேடியும் வேட்டையாடியும் வாழ்ந்தன. வழமையாக சொல்லப்படுவது போல இவர்கள் நாகரீகமற்ற சண்டையும் போட்டியும் நிறைந்த காட்டுமிராண்டி சமூகங்கள் அல்ல.

இவர்கள் 30-40 பேர்கள் கொண்ட சிறு குழுக்களாக செழிப்பாகவே வாழ்ந்தார்கள். இன்றைய ”நாகரீக” சமூகங்களில் வாழ்பவர்களைவிட இவர்கள் கடினமாக வாழ்க்கையை வாழவில்லை. இவர்களிடம் வர்க்கங்கள், சாதிகள் இருக்கவில்லை.

அண்டைய குழுக்களிடையே பெரிய சண்டைகள் கிடையாது. அப்படி ஏற்பட்டாலும் ஒரு குழு பின்வாங்கி சண்டை முடிவுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு சமத்துவமாக ஒத்துழைத்து நாம் வாழ்ந்த வாழ்க்கையே எம்மை உருவாக்கியது. இன்று படிநிலை சமூகங்களுக்கு ஏற்றவாறு நாம் வாழ்நதாலும் எமது ஆழ்மனதில் சமத்துவமும் ஒத்துழைப்பும் சமூக உணர்வும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

இச்சமூகங்களில் வேட்டையாடும் போது ஒருவரின் தலைமையும் வீரமும் அங்கு முக்கியமல்ல. குழுவாக ஒத்துழைப்பதிலேயே வேட்டையின் வெற்றி தங்கியுள்ளது. இதன் போது பெண்களும் சிறுவர்களும் கூட உதவுவார்கள். ஆண்கள் பெண்களை அடக்குவதும் இச்சமூகங்களில் இருக்கவில்லை. முடிவுகளும் குழுவாக சேர்ந்தே எடுக்கப்படும். இவ்வாறான சமூகத்தில் குடும்பமாக இணைந்திருந்த ஆணும் பெண்ணும் அவர்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்காமல் பிரிவதும் இலகுவாக நடந்தது.

இன்று நாம் தனியுடைமையில் காட்டும் ஆர்வமும் இச்சமூகங்களில் இருக்கவில்லை. ஆக இச்சமூகங்கள் வாழ்ந்த சூழல், இன்று நாம் கொண்டிருப்பவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட, கலாச்சாரத்தையும் கருத்துக்களையும் வடிவமைத்தன.

இயற்கையாக கிடைக்கும் உணவை சேகரிப்பதில் போதாமை ஏற்பட்ட போதே உணவை பயிர் செய்ய நாம் விழைந்தோம். இதனால் ஒரே இடத்தில் தங்கி வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது பயிர் செய்கையை பெருக்குவதற்கும், நிரந்தர வீடுகளை கட்டுவதற்குமான புதிய கண்டுபிடிப்புகள் எமக்கு தேவைப்பட்டன.Painting herdsmen cattle Cattle Tassili n Ajjer Alg மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

மானுட இனத்தின் இதற்கான அறிவு பெருகத்தொடங்கியது. எழுத்து முறைகள் தோன்றின. ஒரே இடத்தில் நிரந்தரமாக வாழ்ந்ததால் சமூக கட்டமைப்புக்களும் தோன்றின. நிரந்தரமாக வாழ ஆரம்பித்த பின்னரே இவ்வாறு சமூக கட்டமைப்புக்கள் தோன்றின என்பதை பண்டைய அமெரிக்க சமூகங்களும் உறுதிபடுத்துகின்றன.

ஏனைய உலக மக்களுடன் தொடர்புகள் இல்லாமல் வளர்ந்த பண்டைய அமெரிக்க பேரரசுகளின் வரலாறு ஏனைய இடங்களிலிருந்த பேரரசுகளின் வரலாற்றுடன் பல ஒற்றுமைகளை கொண்டிருக்கிறது. இவற்றில் முக்கியமான குணாம்சங்களாக, சமயம், அதன் பிரதிநிதியாக அரசன், சமயத்தின் குரலாக சமய குருமுதல்வர்கள், பெண்கள் அடிமைப்படுத்துதல், தொழில்ரீதியான சமூகப் படி நிலைகள் இருந்தன.

10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த நிரந்தர இடங்களில் விவசாயம் செய்யும் வழக்கம் வளர்ச்சியடைந்து, 15ம் நுற்றாண்டு வரையும் மேல் குறிப்பிட்ட குணாம்சங்களை கொண்ட அரசுகளை உலகெங்கும் உருவாக்கியது. இதே 15ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக, பல ஐரோப்பிய அரசுகள் உலகின் ஏனைய பகுதிகளின் வளங்களை சுரண்டுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு காலனிகளை உருவாக்கின. இதையே ஐரோப்பியர்கள் ”அமெரிக்காவை கண்டுபிடித்ததாக” தம்பட்டம் அடித்தார்கள். அது வேறு வரலாறு.

17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்திலும் பிரான்சிலும் ”அறிவியல் விழிப்புணர்ச்சி”, ”தாராளவாதம்” போன்ற வார்த்தைகளால் குறிக்கப்படும் மாற்றங்கள் அச்சமூகங்களில் வளர்ந்தன. அரசன் இல்லாத மக்கள் ஆட்சி, மக்கள் சமத்துவம் போன்ற கொள்கைகள் பிரபலமாயின. ஆனால் இக்கருத்துக்கள் ஐரோப்பியர்களுக்கு மட்டுமே என்று இவர்கள் கருதினார்கள். இதே காலத்தில் இதே ஐரோப்பியர்களின், ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கான, அடிமை வணிகம் கோலாகாலமாக தொடர்ந்தது.images 3 மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

நினைத்துப் பாருங்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் இதுதான் நிலைமை. 100,000 ஆண்டுகளாக வாழ்ந்த மானுட இனம், 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் செய்ய ஆரம்பித்து, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பேரரசுகளை கட்டத் தொடங்கி, 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய காலனிய காலத்தை ஆரம்பித்து, 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் தமக்கு மட்டுமே சமத்துவம் பேச ஆரம்பித்து, 100 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஏனைய உலகிற்கு ”மக்களாட்சியும் சமத்துவமும்” வந்தன.

இக்காலம் முழுவதும் வாழ்ந்த மக்கள் ஒரே மக்கள்தான். இவர்கள் வெவ்வேறு வாழ்வு முறைகளின் கீழ் வாழ்வதற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வார்கள் என்பதை இதன் மூலம் கண்டு கொள்ளலாம்.

உண்மை என்வென்றால் ஐரோப்பிய மேலாதிக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் மக்களாட்சி வந்தவுடன் முடிந்து போகவில்லை. காலனிகள் விடுதலை பெற்ற பின்னரும் நவகாலனித்துவம் என்ற ஒரு வார்த்தை பிரபலமானது. அதாவது விடுதலை பெற்ற பின்னரும் காலனித்துவம் வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதையே இவ்வார்த்தை விளக்குகிறது.

ஒவ்வொரு காலனிய நாடுகளிலும், காலனிய காலத்தில் சில வாழ்க்கை முறைகளுக்கு பழக்கப்பட்டுவிட்ட காலனிகளில் இருந்த மேல்மட்டத்தினர், ஐரோப்பிய ஆட்சியாளர்களுடன் விசுவாசாக இருந்து அவர்களின் நன்மைக்காக செயற்பட்டனர். காலனியத்தின் பின்னரும் முந்தைய காலனிகளில் பல தொடர் புரட்சிகள் இடம்பெற்றன.

  • ஏனெனில் ஐரோப்பியர்கள் விட்டுச் சென்ற மக்களாட்சி, காலனிகளின் நன்மைக்காக அல்லாமல், தொடர்ந்தும் காலனிய ஆட்சியாளர்களின் நன்மைக்காவே உருவாக்கப்பட்டன.  இக்காலத்தில்தான் மூன்றாம் உலக நாடுகள் என்ற வார்த்தையும் உருவானது. 1940களில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவின் உலக ஆதிக்கத்தில் ஐ-அமெரிக்காவும் முதன்மை உறுப்பினராக சேர்ந்து கொண்டது.

30-40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை உலகின் மக்களாட்சிகள் ஓரளவாதல் மக்களுக்காக ஆட்சி செய்தன. ஏழைகளுக்கு ரேசனில் இலவச உணவு, இலவச கல்வி மருத்துவம் போன்றவைகளை உலக அரசுகள் முதன்மைபடுத்தின. தற்காலத்தில் இவையும் அழிக்கப்பட்டு உலகமயமாக்கலின் கீழ் நவதாராளவாதம் கோலோச்சுகிறது.1 f8uQm25yvJ1kmYVYZkfJCg மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

கார்பரேசன்களும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும், சில ஐநா அமைப்புக்களும் கூட உலக ஆதிக்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன. இதற்கு மேலதிக தேவைக்காக இராணுவ பலமும், அணுகுண்டுகள், விண்வெளி ஸ்ரேசன்கள், ட்ரோன்கள் என விரிவடைந்துள்ளது. லெனினும் மாவோவும் விடுதலைப்புலிகளும் செய்தது போன்ற ஏழை மக்கள் புரட்சி இனியும் சாத்தியமா என்ற சந்தேகங்கள் பொதுவாக எழும்புகின்றன.

இதற்கு மறாக இணையத்தின் விருத்தியின் வழியால் அறிவுசார் வளர்ச்சி பெருகுவதற்கான சாத்தியங்கள் உருவாகியிருக்கின்றன. பெருகும் அறிவே ஆயுதமாக, இனிமேல் காலத்திய மக்கள் புரட்சிக்கு இது அடிப்படையாக அமையலாம். இதற்காக மக்களிடம், உலக அரசியல் வரலாறு (ஐரோப்பிய வரலாறு மட்டுமல்ல), சமயங்களின் வரலாறு, விஞ்ஞான வரலாறு போன்றவை எல்லாம், சென்றடைய வேண்டும்.

வரலாறுகளும் பல பார்வைகளில் எழுதப்படலாம் என்பது ஈழத்தமிழர்களுக்கு நன்றாக தெரிந்ததே. இதனால் விக்கிபீடியாவிலும், பள்ளிக்கூடங்களிலும், பல்கலைகழகங்களிலும் இருந்து மட்டும் மக்களின் வரலாற்றை அறிய முடியாது. “மக்கள் வரலாற்றை” நாம் படிக்க வேண்டும்.

மக்களின் வரலாற்றை விபரிக்கும் நூல்கள் சில:

Peoples’ History of the world by Chris Harman.

https://www.marxists.org/archive/harman/1999/history/index.htm

இந்நூலின் தமிழாக்கம் பாரதி புத்தகாலயத்தால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

Peoples’ History of the United States of America by Horward Zinn

http://library.uniteddiversity.coop/More_Books_and_Reports/Howard_Zinn-A_peoples_history_of_the_United_States.pdf

History of Latin America by Benjamin Keen and Keith Haynes

https://www.scarsdaleschools.k12.ny.us/cms/lib5/NY01001205/Centricity/Domain/186/Keen%20Reading%20-%20Latin%20America%20in%20the%2019th%20Century.pdf

Basil Davidson என்பவர் ஆபிரிக்காவின் வரலாற்றைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இவற்றில் சிலவும் இணையத்தில் கிடைக்கின்றன.

தொடரும்….