மாகாண சபைத் தேர்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அமைச்சர்கள் – சமாதானப்படுத்திய ஜனாதிபதி

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில்ல, சரத் வீரசேகரா ஆகியோர் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்று மட்டுமல்ல, மாகாணசபைகள் முறைமையே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஒரேயடியாகக் குரல் கொடுத்ததாகத் தெரிகின்றது.

“புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம், மாகாணசபை முறைமையையே ஒழிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தே தேர்தலில் வென்றுள்ளோம். அந்த வாக்குறதிகளை நிறைவு செய்வதற்காகவே மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழங்கி, நாடாளுமன்றுக்கு அனுப்பினர். அந்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவதாயின் மாகாணசபைகளுக்கு நாம் தேர்தல்களை நடத்தக் கூடாது. அந்த மாகாணசபை நிர்வாக முறைமையையே அரசமைப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று மேற்படி மூன்று அமைச்சர்களும் மற்றும் சிலரும் அமைச்சரவையில் கடுமையாக வலியுறுத்தினார்கள்.

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கி, நிலைமைகளைப் பரிசீலித்துத் தாம் ஒரு முடிவு செய்வார் என்று கூறி விவகாரத்தைத் தள்ளிப்போட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

ஆனால் இந்தியத் தரப்புக்கு வாக்குறுதியளித்தபடி வரும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய காலத்தில் – பெரும்பாலும் புத்தாண்டுக்கும் வெசாக்குக்கும் இடைப்பட்ட காலத்தில் – மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்கும் உறுதியில் அரசாங்கம் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.