உயர் நீதிமன்ற தீ விபத்து – முக்கிய ஆவணங்கள் சேதமடையவில்லை – 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டடவளாகத்தில் நேற்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஆவணங்கள் சோதமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தீபத்து குறித்து விசாரிக்க 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தீயால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்துக்கோ அல்லது கோப்புக்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருள்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என்று நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ளது. இதற்கமைய இந்தத் தீ விபத்து மூலம் பாதிக்கப்பட்டது

சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலைமாத்திரமேயாகும். இந்தத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் வெளியாகவில்லை. இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரசின் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றுள்ளது.

இதேவேளை, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை செய்ய மூன்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் உடனடியாக அங்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.