மலையகத்தில் மண்சரிவு, வெள்ள அபாயம்- மக்களை பாதுகாக்குமாறு அரசிடம் கோரிக்கை

116 Views

மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களிலிருந்து பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அபாயகரமான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து, அவர்களை அப்புறப்படுத்தி அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய காணிகளை வழங்குமாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமிய பவனில் நேற்று (03) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் “திம்புள்ள – பத்தனை காவல் பிரிவுக்கு உட்பட்ட மவுண்டவேர்னன் தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் துரதிஷ்டவசமாக ராமசாமி காளியம்மாள் உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது, மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அழிவுகளில் உயிர்கள் பலியாவதை தடுப்பதற்கும், பாதுகாப்பாக வாழ்வதற்குமான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த விடயத்தை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் பெருந்தோட்டத் துறை ரமேஷ் பத்திரண ஆகியோரிடமும் தெரிவித்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அவர்களின் அமைச்சுக்கள் விரைந்து செயற்படும் என என்னிடம் உறுதியளித்தனர்.

மண் சரிவு அபாய பகுதிக்குள் 3000வீடுகள் காணப்படுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வாழ்வதற்கான காணிகளை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். உயிர்போனால் மீண்டும் வராது.

மேலும், போகாவத்தை பாடசாலை அதிபர் ஆசிரியர் தின விழாவுக்காக 300ரூபாவை செலுத்தாத காரணத்தினால் மாணவியொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்காக பணம் அறவிடுதல் முறையாகாது.இதனைக் காரணம்காட்டி மாணவர்களை அடிப்பதோ, திட்டுவதோ நியாயமானதல்ல.

இவ்வாறான விடயங்கள் உங்களது பாடசாலைகளில் இடம்பெறுமானால், அது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ முறைப்பாடு செய்யுங்கள். இது சமூகப் பிரச்சினையாகும், இதனை அரசியல்வாதிகள் தலையிட்டு தீர்க்கும் பிரச்சினை அல்ல.

ஒரு சில அதிபர், ஆசிரியர்களின் தவறான செயற்பாடுகள் ஒட்டு மொத்த அதிபர், ஆசிரியர்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது ” என்றார்.

Leave a Reply