மலேசியா: இந்தியர்கள் உள்பட பல நாட்டு குடியேறிகளை குறிவைத்து செயல்பட்ட ஆட்கடத்தல் கும்பல் 

மலேசியாவின் கிளாந்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில்,  சட்டவிரோதமாக இந்தோனேசிய நாட்டவர்களை அழைத்துச் சென்ற மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். 

மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, 15 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் பயணித்த மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த குடியேறிகள் அனைவரும் 24 முதல் 54 வயதுக்கு உட்பட்ட இந்தோனேசியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியர்களை கடத்தும் செயலில் ஈடுபட்ட கும்பல், இந்தியர்கள் உள்பட பல நாட்டவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறது. இந்தோனேசிய குடியேறிகளை பொறுத்தமட்டில், முதலில் அவர்களை தாய்லாந்துக்குள் அழைத்து சென்று அங்கிருந்து Sungai Golok எல்லை வழியாக மலேசியாவுக்குள் அழைத்து சென்றிருக்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு குடியேறியிடமும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மலேசிய ரிங்கட்டுகள் (1.8 இலட்சம் முதல் 1.27 லட்சம் இந்திய ரூபாய் வரை) பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் குடியேறிகள் மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றுகின்றனர். அதே சமயம், பெண்களாக உள்ள குடியேறிகள் மசாஜ் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கடந்த மே 2022 முதல் செயல்பட்டு வரும் இந்த கும்பல் இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம், இந்திய குடியேறிகளை குறிவைத்து செயல்பட்டு வந்ததாக மலேசிய குடிவரவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கும்பல் ஒரு மாதத்திற்கு சுமார் 160 குடியேறிகளை மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.