மன்னார் மாவடட மாணவர்கள் பாதிப்பு; செல்வத்தின் கோரிக்கை ஏற்பு

வடமாகாண சபையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலே இயங்கிவரும் நிலையில் அதனை வட மேல் மாகாணத்துடன் இணைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைகலநாதன்  விடுத்த கோரிக்கையை வட மாகாண ஆளுநர் நிறைவேற்றியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மன்னார் மாவட்டத்திலேயே கடுமையாக படித்து உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களின் பெறுபேறுகள் மன்னார் மாவட்டத்திலேயே  வெளியிடப்பட்டாலும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தினுள்ளேயே கணக்கில் கொள்ளப்பட்டு வரும் நிலையில் மன்னாரில் இருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் கடுமையான பாதிப்புக்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

அத்துடன் புத்தளத்தில் இயங்கிவந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு  சம்பளமும் வட மாகாணத்தில் இருந்து  அனுப்பப்பட்டு வந்தது.

புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டதினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என ஒரு தீர்மானம் வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆகவே இதை நீங்கள் உடனடியாக கவனத்தில் கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப்பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு செல்வம் எம்.பி ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் இணைத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் அவர்களின்  கோரிக்கையினை நிறைவேற்றிய வடமாகாண ஆளுநர் அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.