சிறீலங்காவையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற போராடும் சந்திரிக்கா

சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் கோத்தபாயா வெற்றியீட்டினால் சிறீலங்கா அரசு அனைத்துலக மட்டத்தில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் அதனால் சிங்கள சமூகம் பல பாதிப்புக்களைச் சந்திக்கலாம் என சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கா கருதுவதாக கொழும்பு நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தாதது, சந்திரிக்காவை அதிக சீற்றம் கொள்ளச் செய்துள்ளது. கடந்த காலங்களில் ஏழு தேர்தல்களில் நான்கு தேர்தல்களில் சுதந்திரக் கட்சி வெற்றியீட்டியிருந்தது. ஆனால் தற்போது அதனை மைத்திரி மழுங்கடித்து விட்டார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவை ஆதரிப்பது என்பது அந்தக் கட்சியின் அழிவையே காட்டுகின்றது. கடந்த தேர்தலில் 62 இலட்சம் வாக்குகளைப் பெற்ற மைத்திரி கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். எனவே சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மைத்திரியின் முடிவுக்கு 95 விகித கட்சி அமைப்பாளர்கள் உடன்படவில்லை. எமது கட்சி கொலைகாரர்கள், ஏமாற்றுக்காரர்களைக் கொண்டதல்ல. நமது கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே தற்போது சந்திரிக்கா செயற்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.