வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பெரியதம்பனை பகுதியில் அமைநந்துள்ள கள்ளுத்தவறணையால் அங்குள்ள இளைஞர்கள் மது அருந்திவிட்டு கிராமத்திற்குள் பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டும் குடும்பப் பொருளாதாரத்தை திட்டமிட்டுச் சீரழிக்கும் செயல்களிலும் வளர்ந்து வரும் இளம் சமூகம் சிறுவயதிலேயே துர்நடத்தைகளிலும் ஈடுபட்டும் காரணங்களை முன்வைத்து அப்பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி பெரியதம்பனை கிராம அபிவிருத்திச்சங்கம் 159பேர் கையெழுத்துடன் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புளியங்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏழாவது கிளையானது எமது பெரியதம்பனைப்பகுதியில் கிராமத்தில் கள்ளுத்தவறணை இயங்கி வருகின்றது. குறித்த கள்ளுத்தவறணையானது கிராம மக்களினதும் கிராம மட்ட நலன்புரி அமைப்புக்களினதும் எமது பகுதி கிராம அலுவலகரின் கட்டளையையும் மீறி இயங்கி வருகின்றது.
குறித்த கள்ளுத்தவறணையில் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட போத்தல் கள்ளுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிராம உற்பத்திக் கள்ளினை விற்பனை செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கள்ளுத்தவறணையில் தற்போது போத்தல் கள்ளு பெருவாரியாக இறக்கி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மிகவும் வறுமையில் வாடும் இக்கிராம மக்களின் வாழ்வாரத்தை மேலும் சீரழிக்கும் இச் செயலானது கண்டிக்கத்தக்கது. மதுப்பிரியர்கள் கள்ளிணை அருந்திவிட்டு கிராமத்திற்குள் பற்பல அடாவடித்தனங்கள் செய்தும் குடும்பப் பொருளாதாரத்தை திட்டமிட்டு சீரழிக்கும் செயற்படும் வளர்ந்து வரும் இளம் சமூகம் சிறுவயதிலேயே துர்நடத்தைகளில் ஈடுபடுவதற்கும் மேலும் பல காரணங்ளை உருவாக்கும் நடவடிக்கையாகவும் அமைந்துவிட்டது. உடனடியாக கள்ளுத்தவறணையை அப்புறப்படுத்தி கிராமத்தையும் அதனை சுற்றியுள்ள கிராமத்தின் மக்களின் பாதுகாப்பினையும் பாதுகாத்திட தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான புளியங்குளம் பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்க பெரியதம்பனை ஏழாம் இலக்க கள்ளுத்தவறணையானது அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துமாறும் எமது கிராம மக்களின் வேண்டுகேளாக 159கிராம மக்கள் கையொப்பமிடப்பட்ட பெயர் பட்டியலையும் அத்துடன் இணைத்துள்ளோம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது