மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி பொலிஸாரின் தடையினையும் உடைத்து மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று காலை மாபெரும் பேரணிக்கு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகள் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளினால் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பேரணியில் கலந்துகொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த பேரணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று ஊடாக தடையுத்தரவு கோரப்பட்டு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை கல்லடி பாலத்திற்கு அருகில் குறித்த பேரணியில் கலந்துகொள்ளச்சென்ற மக்களை அங்கிருந்து செல்லுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் அச்சுறுத்தல்களை விடுத்தபோதிலும் கல்லடி பாலத்திற்கு அருகில் திரண்ட பெருமளவான மக்கள் ஊர்வலம் செல்ல முயற்சித்தபோதிலும் பொலிஸார் அவற்றினை தடுத்து நிறுத்தினர்.

Batti 30 8 2020 3 மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்இதன்போது நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்து காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.

இங்கு கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்குவந்திருந்த மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

Batti 30 8 2020 1 மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் என்று கூறி தமது போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை அழித்ததாக மகிந்தராஜபகஸ் அவர்கள் கூறியுள்ள நிலையில் 60வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்தா விடுதலைப்புலிகளை மீள அமைக்கப்போகின்றோம் என்று இங்கு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணி தெரிவித்தார்.

நாங்கள் எங்களின் கைகளினால் வழங்கப்பட்ட பிள்ளைகளையும் கணவன் மாரையும் எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள் என்றே போராடுகின்றோம் எனவும் அவர் இதன்போது பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேநேரம் கலகம் அடக்கும் பொலிஸாரும் பெருமளவான பொலிஸாரும் கல்லடி பாலத்திற்கு அருகில் குவிக்கப்பட்டிருந்ததுடன் கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த புனித செபஸ்தியார் ஆலயத்தில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மனித உரிமைகள் ஆர்வலர்கள்,அரசியல்வாதிகள,இளைஞர்கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் குறித்த தேவாலயப்பகுதியில் திரண்டிருந்தனர்.

இதன்போது தேவாலய வாசல்கதவுகளை மூடிய பொலிஸார் அவர்கள் பேரணியை செல்லாத வகையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அங்குவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.இதன்போது உறவுகள் எந்த செயற்பாடுகளை மேற்கொண்டாலும் தன்னால் ஆதரவு வழங்கமுடியும் என தெரிவித்தார்.

இதன்போது தேவாலயத்தில் இருந்து மக்கள் பேரணியாக செல்லமுற்பட்டபோது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு தேவாலயத்தின் முன் வாயில் கதவு பொலிஸாரினால் மூடப்பட்டது.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலிஸாருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலநாயகிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.எனக்கு வழங்கப்படவில்லையென தெரிவித்து பொலிஸாரையும் தளியபடி வாயில் கதவினை வலுக்கட்டாயமாக திறந்து வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணியை நடாத்திச்சென்றார்.

இதன்போது பல இடங்களில் பேரணியை பொலிஸார் தடுக்கமுற்பட்டபோதும் கலகமடக்கும் பொலிஸாரைக்கொண்டும் பேரணியை தடுக்கமுற்பட்டபோது பேரணி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு பிரதான வீதியுடாக புகையிரத வீதியுடாக சென்று தாண்டவன்வெளி சந்தி ஊடாக சென்று திருமலை வீதியுடாக காந்திபூங்காவரையில் வந்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகளையும் கொரனாவினையும் காரணம் காட்டி தமது போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு தெரிவித்தனர்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்படுவதற்கான மகஜர் ஒன்று மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசனிடம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.