பௌத்தத்தை பாதுகாக்கவே தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாகவும், அதன் இலட்சினையும் அவ்விடயத்தையே பிரதிபலிக்கிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில் தாகபையும், தர்மச்சக்கமும் மட்டுமே உள்ளது. அது பௌத்தசாசன அமைச்சின் சின்னமா என்று எண்ணத்தோன்றுகிறது. தொல்பொருள் திணைக்களம் ஒரு மதத்தை மாத்திரமே பிரதிபலிக்கிறது. அந்த திணைக்களம் எதனை பாதுகாக்க முயல்கிறது என்பதை அதன் இலட்சினை பிரதிபலிக்கிறது. அது ஏனைய மத அடையாளங்களை அளிக்க முயல்கிறது.
நெடுக்குநாறி மலை மத சின்னங்கள் அழிப்பு தொடர்பான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி என்ற வகையில் விடயமொன்றை கூற விரும்புகிறேன். தற்போது அங்குள்ள இந்து மத சின்னங்கள் அளிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அங்கு வழிபாடுகளை தடுக்கும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதற்கு எதிராக பல வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், அவர்களால் அதனை தடுக்க முடியவில்லை. தற்போது, ஜீப்களில், கட்டை காற்சட்டை அணிந்துவந்த இனந்தெரியாதோரால் மத சின்னங்கள் தாக்கியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் என்றார்.
இதன்போது, குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, அவ்வாறான மத சின்ன அழிப்புக்கு இந்த அரசாங்கம் இடமளிக்கவில்லை. இது முற்றிலும் பொய்யான கருத்து என்றார்.
தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினை, இன்று நேற்று அல்ல அது பல வருடங்களுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டதொன்று. எனவே, எந்த மதத்துக்கும் நாம் வேறுபாடுகளை காட்டுவதில்லை என்றார்.
இதனையடுத்து, கேள்வியெழுப்பிய சுமந்திரன், இந்த இலட்சினையை தற்போது மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமரவீர, பாராளுமன்றில் இது குறித்து பிரேரணையொன்றை கொண்டு வருமாறு அறிவித்ததுடன், விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன், தாம் வன்முறையை விரும்பவில்லை என்றும், அரசாங்கத்தின் இனவாத நோக்கிலான செயற்பாடுகள் களையப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.