தமிழின அழிப்பினை காலங்காலமாக நிகழ்த்தி வருகின்ற பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியே வந்திருக்கிறது எனவும் அண்மைய காலங்களில் நடைபெற்று வருகின்ற அத்தனை சம்பவங்களும் இதனை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன என பாராளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நேற்று (24.04.2023) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்டபட்டுள்ளதாவது,
”பயங்கரவாதத்தடைச் சட்டமே வேண்டாமென்கிற நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தின் மூலமாக தமிழ் பேசும் மக்களின் அத்தனை உரிமைகளையும் பறித்தெடுக்கவே அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இனப்பிரச்சினையின் காலான முரண்பாட்டினால் உருவான யுத்தம் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டு 4 ஜனாதிபதிகள் 6 பிரதமர்கள் மாறியுள்ளனர். அதே போன்றே அரசாங்கங்களும் மாறிவிட்டன.
இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் ஏன் என்பதற்கான கேள்வியே இப்போதைக்கு சாதாரணமானதாகி விட்டது. நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை அரசாங்கம் கணக்கிலெடுப்பதாகவே தெரியவிலலை.
இவ்வாறான நிலையில் நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கெதிராக தமிழ் பேசும் மக்களாகிய நாம் போராடவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக தமிழ் மக்களுக்கெதிரான தொல்பொருள் செயலணி, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும், பௌத்தமயமாக்கல் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், இயற்கை வளங்களை சூறையாடுதல், வன வளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி பகிர்ந்தளிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விடயம், மனித உரிமை மீறல்கள், தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் போர்வையில் சிங்கள மயமாக்கல், மதவழிபாட்டுக்கு தடை விதித்தல், பௌத்த விகாரை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் திட்டமிட்டவாறு விரைவாகவும், சிறப்பாகவும் நடைபெறுகின்றன.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் உருவான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டையே புரட்டிப் போட்டன. ஆனாலும் எதுவும் நடைபெறாதது போலும், ஏதும் அறியாதது போலும் அரசாங்கம் மேற்கொள்ளகின்ற ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை இல்லாதொழிக்கவேண்டியது மக்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமே நாளை நடைபெறவுள்ள நிர்வாக முடக்கலாகும். இத் தினத்தில் சந்தைகளை மூடி, கடைகளை அடைத்து போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஒத்துழையுங்கள்.
அத்தோடு அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புகளை மேற்கொண்டு நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு வழங்குங்கள். சிறுபான்மை இனங்கள், அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து உரிமைகளைத் துறந்து, நடந்தவைகளை மறந்து நடப்பவைகளை காணாது வாழப் பழகிக்கொள்ளல் இந் நாட்டில் சிறப்பானதொரு வாழ்க்கைக்கான வழி என்பதே சிங்கள அரசுகளின் எண்ணமாக இருக்கிறது.
அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக ஒன்றுதிரள்வோம். அரசின் கடும்போக்கை அடக்குவோம். நாட்டைக் குட்டிச்சுவராக்கும் மக்களது உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளைக் களைந்தெறிவோம்‘‘ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.