“போருக்கு தயாராகுங்கள்”- இராணுவத்தினருக்கு  சீன அதிபர் உத்தரவு

சாஜோ நகரில் இராணுவ கடல் பிரிவு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட ஷி ஜின்பிங்,“ போருக்கு தயாராகுங்கள், எல்லையில் மிகவும் விழிப்புணர்வுடன் இருங்கள். முழு விசுவாசம், அர்ப்பணிப்பு, நம்பிக்கையுடன் இருங்கள். அவைதான் நாட்டுக்கு தேவை என்று  சீன அதிபர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிபரின்  இந்த உரையை சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவுடன் லடாக் எல்லை பிரச்னை, தென் சீன கடல் பிராந்தியத்தில் தைவான், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளுடன் பிரச்னை, திபெத்தில் பிரச்சனை என சீனாவின் ஆளுகை விரிவாக்கத்தின் முயற்சிகளுக்கு எந்தெந்த நாடுகள் எல்லாம் எதிர்ப்பாக உள்ளனவோ அங்கெல்லாம் எல்லையிலும் கடல் பகுதியிலும் தமது படைத்துருப்புகளை சீனா குவித்து உள்ளது.

இந்த நிலையில், சீன அதிபரின் அழைப்பு, இந்தியாவை மையப்படுத்தியா அல்லது அமெரிக்கா அல்லது ஜப்பானுடனா என்பது தெளிவற்று உள்ளது. தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்க மறுத்தது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு சீனாவே முக்கிய காரணம் என டிரம்ப் குற்றஞ்சாட்டுவது ஆகிய அனைத்தும் சீனாவை ஆத்திரமூட்டி வருகின்றன.

இந்த நிலையில், தைவானின் பிராந்திய பாதுகாப்புக்காக அதிநவீனத்துவம் வாய்ந்த ஆயுத தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சீனா,  தைவான் உடனான இந்த இராணுவ தளவாட விற்பனையை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஆனால் சீனாவின் மிரட்டலை தைவானோ, அமெரிக்காவோ பெரிதாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தப்பின்னணியில், தைவான் மற்றும் சீனாவை இணைக்கும் நிலப்பகுியில் சீன படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதேவேளை, லடாக் பிராந்தியத்தில் இரு தரப்பு ராணுவ கட்டளை அதிகாரிகளுடன் ஆன பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சீன படையினர் முகாமிட்டுள்ள இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் மேலதிக படையினரை சீனா குவித்து வருகின்றது.

லடாக் எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த புதன்கிழமை மீண்டும் லடாக் விவகாரத்தை எழுப்பிய சீனா, லடாக்கில் இந்தியா சட்டவிரோதமாக எழுப்பிய அமைப்புகளை தங்கள் நாடு அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தது.

இத்தகைய எதிர்வினை, இந்தியாவுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு பார்க்கவில்லையா என இந்திய வெளியுறவுத்துறையிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, லடாக் விவகாரத்திலும் சரி, காஷ்மீர் விவகாரத்திலும் சரி, சீனா தலையிட தார்மீக உரிமை கிடையாது என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் எல்லை பகுதியில் 44 புதிய மேம்பாலங்களை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். அதன் பிறகே, எல்லைப்புறங்களில் தமது படையினரின் எண்ணிக்கையை சீனா அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், இந்தியாவின் இதுபோன்ற செயல்பாடுகள்தான் இரு தரப்பு பதற்றம் தீவிரம் அடைய மூல காரணம் என்று கூறினார்.

மேலும் முடிவுமாக நாங்கள் அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரிக்கவில்லை. இரண்டாவது அங்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு உள்கட்டமைப்பு மற்றும் எல்லையில் நிறுவப்படும் இராணுவ வசதிகளை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறினார்.

இந்தப் பின்னணியில் சீனா குவித்து வரும் படைக்கு ஈடாக, தமது படை தளவாடங்களின் இருப்பை அதிகரிக்க இந்தியா தமது தளவாட வசதிகளை பெருக்கி வருவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், சீன அதிபர் தமது இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில், போருக்கு தயாராகுங்கள், விசுவாசமாக இருங்கள்” என்று கூறியுள்ளது  பல கேள்விகளை எழுப்பியுள்ளது.