போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்-பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்” – எதிர்க்கட்சி கோரிக்கை

காலிமுகத் திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “காலிமுகத் திடல் கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பலரும் வன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலிமுகத் திடல் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்.

மேலும், காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கடுமையான தாக்குதல் தொடர்பில் பல்வேறு சர்வதேச சமூகம் சார்ந்த அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இவ்விடயம் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரமடையச் செய்யும்.

அதற்கமைவாக, குறித்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் கோரிக்கை விடுக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.