புயல் எச்சரிக்கை-  பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

425 Views

கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து முன்னாயத்த செயற்பாடுகள்  எடுக்கப்பட்டுள்ளன.

தென் கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து கிழக்கு ஊடாக கடந்துசெல்லும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள்,அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

IMG 0943 புயல் எச்சரிக்கை-  பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ குழு வழங்கும் தீர்மானங்களுக்கு அமைவாக நாளை பிற்பகல் தொடக்கம் பொதுமக்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாநகரசபையின் முழுமையான பங்களிப்பினை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

புரவி சூறாவளி மட்டக்கள்பபு மாநகரத்தினை தாக்கும்பட்சத்தில் மாநகரசபையின் முன்னாயத்த படையணி மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு தயாராகயிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

பதவி நிலை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளை இரத்து செய்வதோடு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தலுடன் அனர்த்த ஆபயக் குறைப்பு பணிகளில் ஈடுபடும் வகையில் மாநகர தீயணைப்பு படையணியை முழுமையாக பயன் படுத்தல். அத்துடன் மாநகரத்துக்குள் காணப்படும் ஆபத்தான மரங்களை இனம் கண்டு உடனடியாக அகற்றுத்தல் போன்ற தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டன.

இதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.

Leave a Reply