மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம் நிமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

இதன்மூலம் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியராக பதவி உயர்வு பெறும் இரண்டாவது மலையகத் தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

25 ஆண்டுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் வழக்குத் தொடுனராக கடமையாற்றிய சட்டத்தரணி பிரபாகரன் குமாரரட்ணம், மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிவரை பதவியுயர்வு பெற்று பல்லாயிரக் கணக்கான குற்றவியல் வழக்குகளை நெறிப்படுத்தியிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரட்ணம், குமாரரட்ணம் தம்பதிக்கு இளைய மகனாக 1964ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி கண்டி – புஸல்லாவ பிறந்தார். புஸல்லாவ பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற பிரபாகரன் குமாரரட்ணம், தலவாக்கலை சுமண மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கல்வியைப் பயின்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்று சட்டத்தரணியாக 1993ஆம் ஆண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி சட்டத்தரணி மோதிலால் நேருவின் இளநிலை சட்டத்தரணியாக பயிற்சி பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி ( குற்றவியல் நீதி, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டம்) பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பிரபாகரன் குமாரரட்ணம், பிஜி குடியரசில் பரிஸ்டராகவும் சொலிஸிட்டராகவும் பணியாற்றினார்.

விளையாட்டுத்துறையில் பிரகாசித்த பிரபாகரன் குமாரரட்ணம், 1990-91 கல்வியாண்டில் கொழும்பு பல்கலைக்கழக கால்பந்து அணியின் தலைவராக இருந்தார். 1995ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக இணைந்து கொண்ட அவர், 2005ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் அனைத்து மாவட்ட மேல் நீதிமன்றங்களிலும் முன்னிலையாகி மும்மொழிகளிலும் வழக்குகளை நெறிப்படுத்தியுள்ளார்.

2005ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை மூத்த அரச சட்டவாதியாக செயற்பட்ட பிரபாகரன் குமாரரட்ணம், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நெறிப்படுத்தியுள்ளார். நாடுமுழுவதிலும் உள்ள அரச சட்டவாதிகளுக்கும் அவர் வழிகாட்டியாகி இருந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை பிரதி மன்றாடியார் அதிபதியாக (DEPUTY SOLICITORS GENERAL) சட்ட மா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவுகளின் மேற்பார்வையாளராக பிரபாகரன் குமாரரட்ணம் கடமையாற்றியுள்ளார்.

2018ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி மூத்த பிரதி மன்றாடியார் அதிபதியாக (SENIOR DEPUTY SOLICITORS GENERAL) பதவியுயர்வு பெற்ற பிரபாகரன் குமாரரட்ணம், வடக்கு மாகாணம், நீர்கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் குற்றவியல் வழக்குகளை நெறிப்படுத்துவராகக் கடமையாற்றியுள்ளார்.

2018ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் (Trial-At-Bar) முன்னிலையாகி சாட்சிகளை நெறிப்படுத்தி அந்த வழக்கின் 8 எதிரிகளுக்கு தூக்குத் தண்டனை மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி பிரபாகரன் குமாரரட்ணம் பெற்றுக்கொடுத்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை வழக்கிலும் வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தினார். இன்று வரை மூத்த பிரதி மன்றாடியார் அதிபதியாகக் கடமையாற்றிய பிரபாகரன் குமாரரட்ணம், மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசராக நாடாளுமன்ற பேரவையின் ஒப்புதலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்குத் தொடுநராக 25 ஆண்டுகள் சேவைக்காலத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை அரச சார்பில் முன்னெடுத்து சிறப்பாக வாதாடியதுடன் விட்டுக்கொடுக்காத இறுக்கமான வழக்குத் தொடுநராகவும் சேவையாற்றியுள்ளார்.

2020ஆம் ஆண்டு டிசெம்பர் முதலாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

இதன்மூலம் இரண்டாவது மலையகத் தமிழர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியுயர்வு பெற்றுள்ளார். முதலாவதாக தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, மலையகத் தமிழராக இந்தப் பதவிக்கு உயர்வு பெற்றார்.

இலங்கைக்கு வெளியே வெளிநாட்டு நீதிபதியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம் கடமையாற்றியுள்ளார். 2012-2014ஆம் ஆண்டுகளில் பிஜி நாட்டின் மேல் நீதிமன்ற நீதிபதியாக அவர் கடமையாற்றினார். அதன்போது அவர் 300க்கும் மேற்பட்ட ஆணைகள் மற்றும் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

2014 ஏப்ரலில் பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரரட்ணம் நியமிக்கப்பட்டார். இயற்கை பேரழிவு (சுனாமி) தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு உதவ சட்ட ஆலோசகராக அவர் சட்ட மா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டார்.

சிறுவர் துன்புறுத்தல்கள், சிறுவர் தொழிலாளர் மற்றும் ஆள் கடத்தல், அடிப்படை உரிமைகள் மற்றும் உள்நாட்டு வன்முறை ஆகிய சட்டங்கள் தொடர்பான சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கான நோக்குநிலை திட்டத்திற்கான சட்ட மா அதிபரால் பிரபாகரன் குமாரரட்ணம் பரிந்துரைக்கப்பட்டார்.