புதிய வேளாண் சட்டங்கள்- விவசாயிகளுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளன- பிரதமர் மோடி

496 Views

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் குறைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும், புதிய உரிமைகளையும் வழங்கியுள்ளன என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில்  உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று  பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகையில்,

இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பல கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைத்திருப்பதாகவும், அவர்களுக்கு புதிய உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.  ஆழமான கலந்துரையாடல்களுக்கு பின்னரே இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிற அரசியல் கட்சிகள் வாக்குறுதி மட்டுமே அளித்து வந்தன. ஆனால் நாங்கள் அதை நிறைவேற்றி உள்ளோம். இந்தச் சட்டத்தின் படி விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்த 3 நாட்களில் அவர்களுக்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் என்பதை உறுதியளிக்கிறது.

ஒருவேளை பணம் 3 நாட்களில் வழங்காவிட்டால், அந்த விவசாயி புகார் அளிக்கலாம். அதுமட்டுமல்லாமல் புகார் பெற்றபின் அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்துக்குள் புகாருக்குத் தீர்வு காண வேண்டும்.

வேளாண் மற்றும் அது தொடர்பான பணிகளில் இந்தியாவில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் பாரன் மாவட்டத்தில் உள்ள முகமது அஸ்லாம் ஜி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜிதேந்திர போஜி, வீரேந்திர யாதவ் ஆகியோர் வேளாண் மூலம் அதிகமான லாபத்தை அடைந்து வருகிறார்கள்.

விளைநிலங்களில் அறுவடைக்குப் பின் மீதமாகும் வைக்கோலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, வைக்கோல் எரிப்பதால் உருவாகும் காற்று மாசுக்குத் தீர்வு கண்டுள்ளார்கள். இவர்களுக்கு வேளாண் துறையும் உதவி வருகிறது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்திவரும் சூழலில், அந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply