பிரேரணையை கைவிடுங்கள் – அமெ. துணைத் தூதுவரை அழைத்து தினேஷ் வலியுறுத்து

கொழும்பிலுள்ள அமெரிக்க துணைத் தூதுவர் மார்ட்டின் ரி கெலியை வெளிவிவகார அமைச்சுக்கு நேற்று அழைத்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமெரிக்க காங்கிரஸில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தையிட்டு இலங்கை அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

“இந்தத் தீர்மானம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும். அமெரிக்க வெளிவிவகாரக் குழு அல்லது காங்கிரஸ் அதனைச் செய்வதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்விடயத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும்” எனவும் இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸில் கடந்த மாதம் 18 ஆம் திகதி இலங்கை குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அது தற்போது வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையிலேயே தமது கவலையை வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் இதன்போது நன்றி தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, கடந்த 18 ஆம் திகதி காங்கிரஸ் உறுப்பினர் Deborah Ross என்பவரால் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தையிட்டு இலங்கையின் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் குணவர்த்தன, இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உடனடியாகத் தலையிட்டு, குறிப்பிட்ட பிரேரணையை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் அல்லது அதில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமெரிக்க வெளிவிவகாரக் குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் மூலமாக, அல்லது சம்பந்தப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மூலமாக அமெரிக்கா இதனைச் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குணவர்த்தன கேட்டுக்கொண்டார்.

Leave a Reply