பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

722 Views

ஒரு இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம் பகிரப்படுகிறது என்பதே சனநாயகப் பண்புகளைத் தீர்மானிக்கிறது.

  1. புலிகள் தேசியச் சிக்கலை ஒரு இராணுவ உத்தி என்று ஒற்றைப் பார்வையில் பார்க்கவில்லை. மாறாக அதனை சமூகப் பண்பாட்டிலிருந்து உலக அரசியல் வரை தொடர்பு கொண்டு ஒரு சிக்கலான அமைப்பாகவே (complex System) பார்த்தனர். அதனால் இராணுவ அமைப்பு மட்டும் என்றில்லாமல், பண்பாடு, ஊடகம், மொழி, அரசியல் கட்சிகள், உலகளாவிய தமிழர் அமைப்புகள், பொருளாதாரம், மற்ற நாடுகளுடனான உறவுகள் என அனைத்தையும் கட்டி ஆளும்  அளவிற்கு அமைப்புகளை உருவாக்கினார்கள்.  இவ்வாறு பல்வேறு அமைப்புகளைக் கட்டியெழுப்பி வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கினார்கள். அடிப்படையில்  அவர்கள், ஒரு உத்தி  என்றில்லாமல் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தினார்கள். இதுதான் அவர்கள் கூறாமல் செயல்படுத்திய பெருந்திட்டம்.

அவர்கள் எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அங்கங்கெல்லாம் உத்திகளைப் பெருக்கினார்கள். அவ்வாறான செயற்பாடு படைத்துறையில் மிக அதிகம். பீரங்கிப்படை, கடற்படை, வான்படை,  என்று படைத்துறைக் கட்டுமானங்கள் வளர்ந்து கொண்டே சென்றன. இன்று இருந்தால் அவர்கள் விண்ணையும் கைப்பற்றி இருப்பார்கள்.

அவர்களின் பெருந்திட்டம் என்பது தொடர்ந்து கற்று, புதுப்புது அமைப்புகளைக் கட்டமைத்து வெற்றி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதுதான். அதை படைத்துறை என்றில்லாமல்  அனைத்து துறைகளிலும் செய்தார்கள், ஈழத்திலிருந்து உலகம் வரை உருவாக்கினார்கள். இவை எல்லாம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்களை குழுக்களின் குழுவாகக் கட்டமைத்ததே. ஒரு தலைவர் திட்டமிட்டு அனைத்தையும் சர்வாதிகார முறையில்  உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியம்.

7.அவர்கள் எதிரும் புதிருமான உத்திகளைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். ஆயுதப் போராட்டம் செய்தாலும், திலீபன் உண்ணாவிரதம் இருந்த அமைதிப் போராட்டமும் நடந்தது. அரசியல் கட்சிகளையும் இணைத்து  ஒரே குறிக்கோளை நோக்கி பயணித்தனர். ஆயுதப் போராட்டம் என்பதால், அவர்கள் அரசியலை நிராகரிக்கவில்லை. அரசியல் அமைப்புகளையும் வெற்றிக்குத் தேவையான கருவிகளாகப் பார்த்தனர். எப்பொழுது   அரசியல் கட்சிகள் ஒரே குறிக்கோளில் இணைந்து பயணிக்கவில்லையோ, அப்பொழுதே  முறுகல் நிலை ஏற்பட்டது. அடிப்படையில் அவர்கள் அனைத்து உத்திகளையும் சூழலுக்குத் தகுந்து  பயன்படுத்தினர். ஆனால் குறிக்கோளில் எந்த மாற்றமும் இருக்காது.

8.அவர்கள் அதிவேகமாக அமைப்புகளை உருவாக்கி, சோதனைகள் செய்து கற்று அதிவேகமாக வளர்ந்தார்கள். ஒற்றைத்  துப்பாக்கியில் ஆரம்பித்த இயக்கம் வான்படை வரை வளர்வது கற்றல் இல்லாமல் சாத்தியமில்லை.air wing1 பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

9.புலிகள் இயக்கம் மீளெழும்பும் (Resilient) இயக்கம், உடையக்கூடிய (fragile) இயக்கம் அல்ல. காலப் போக்கில் எத்தனையோ மிகச்சிறந்த தளபதிகளை இழந்தாலும், புலிகள் இயக்கம் சரியவில்லை. மேலும் அதிகமாக புதிய தளபதிகள் வளர்த்தெடுக்கப்பட்டு, இயக்கம் முன்னேறிச் சென்றது. பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவ்வியக்கம் தொடர்ந்திருக்கும் என்று ஆய்வாளர் தராகி சிவராம் குறிப்பிட்டுள்ளார்.

இது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக் கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயற்படுவார்கள். தலைவர் குறிக்கோளை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள். அவ்வாறான தலைவரை நம்பிக்கைத் துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டு விடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.

தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்று விடும். அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசைமாற்ற முடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரிசெய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை, இழப்புகளை அதுவே சரிசெய்து கொள்ளும். குறிக்கோளை விடாப்பிடியாக நிற்காமல் துரத்தும்.

பொருளாதார உத்திகள்

10 . புலிகள் இயக்கத்திற்கான பொருளாதாரம் என்பது மக்களிடமிருந்தும் தங்களது செயற்பாடுகளில் இருந்தும் மட்டுமே வந்தது. பொருளாதாரத்திற்கு என்று உலகளாவிய அமைப்புகளைக் கட்டி எழுப்பினார்கள்.  அந்நிய உதவிகள் என்பது இலவசமல்ல,  அவர்களின் கட்டளைகளை கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் இயக்கத்தின் பொருளாதாரம் என்பது வெளியார் யாரையும் நம்பி கட்டமைக்கப்படவில்லை.unnamed 1 பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

11.இருக்கும் பொருளாதாரத்தை மிகச் சிக்கனமாகப் (efficient) பயன்படுத்தினர். பல்வேறு ஆயுதங்களை தாங்களே உற்பத்தியும் செய்தார்கள். உதாரணமாக சிறிய விமானங்களை வாங்கி போர் விமானங்களாக மாற்றினார்கள்.

12 .எதிரியின் ஆற்றலை வீணடித்தனர் உறிஞ்சினர். பல ஆயுத தளபாடங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.   சிறு படைகளைக் கொண்டு பெரு நட்டத்தை எதிரிக்கு உருவாக்குவதில் அவர்கள் கைதேந்தவர்கள். சிறிலங்காவின் பொருளாதாரத்தை சிதைத்தார்கள்.

அறிவுசார் உத்திகள்:

13 .அவர்கள் போர் உத்திகளில் மட்டுமில்லாமல், அமைப்புகளைக் கட்டமைக்கும் முறைகளிலும் உலகில் முன்னோடியாக இருந்தார்கள். அவர்கள்தான் முதன் முதலில் குழுக்களின் குழு முறையில் செயற்பட்டு மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள். அவ்வாறில்லாமல், இந்தியப் படைகளையும் உலக இராணுவங்கள் பயிற்சியளித்த சிறிலங்கா படைகளையும் பலமுறை தோற்கடித்தது சாத்தியப்பட்டிருக்காது. அவர்களின் அறிவு கற்றலின் மூலமும், அனுபவங்களின் மூலமும் படிப்படியாக பரிணமித்து வந்தவை.

போரில் எதிரியின் நிலைகளைப் பற்றிய அறிவு உளவு மூலம் வருவதால், மிகச்சிறந்த உளவுப்படையைக் கட்டமைத்தார்கள். அதே நேரம் தங்களின் நிலைகளைப் பற்றி இரகசியம் காத்தார்கள்.

மொத்தத்தில் புலிகள் சிறிலங்காவைவிட அறிவிலும், ஆற்றலிலும், வேறுபட்ட உத்திகளிலும் உயர்ந்திருந்தனர். போர் உத்திகளிலும் அமைப்பு முறைகளிலும் உலகிற்கே முன்னோடியாக இருந்தனர். மாறாக சிறிலங்கா காலாவதியான போர்  உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.

அவர்களின் பொருளாதாரத்தை புலிகள் கடுமையாக சேதப்படுத்தினர், பொருளாதாரம் ஒற்றைக்காலில் உலகநாடுகள் அளித்த கடன்களில் நொண்டிக் கொண்டிருந்தது. இதன் விளைவாக  மூன்றாம்  ஈழப்போரில் உலகம் வியக்கும் சாதனைகளைப் படைத்தனர். அப்படி இருந்தும் ஏன் 2009இல் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்வி எழும். புலிகள் சிறிலங்காவை எப்பொழுதோ தோற்கடித்து விட்டனர். unnamed 1 1 பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

அவர்கள் 2009இல் பின்னடைவை சந்தித்தது உலகத்திடம், சிறிலங்காவிடம் அல்ல.  2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் உலகில் அனைத்து போராடும் குழுக்களுக்கும் எதிரான நிலை ஏற்பட்டது. புலிகளின் பொருளாதாரம் முடக்கப்பட்டது, ஆயுத வரவு முடக்கப்பட்டது, காட்டிக் கொடுக்கப்பட்டது; ஆனால் அதே நேரம் சிறிலங்காவிற்கு பல கோடிகள் கடன் அளிக்கப்பட்டது, ஆயுதங்கள் கொட்டப்பட்டது, புலிகளுக்கு எதிரான புதிய போர் வியூகங்களை உலக இராணுவங்கள் கற்பித்தன, பல உலகத்தமிழர் அமைப்புகள் தடை செய்யப்பட்டன, உலக ஆதரவு சிறிலங்காவின் பக்கம் சென்றது.

இவை போன்று அனைத்தையும் புலிகளுக்கு எதிராக உலகம் செய்தது. இந்த நிலைமையில் யார்தான் போரிட முடியும்? இத்தனைக்கும் 2001இல் நடந்த நிகழ்வுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு பூலோக அரசியல் சுனாமி, அனைத்து தேசிய  போராட்டங்களையும் தாக்கியது. இது போன்ற முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எப்படி திட்டமிட முடியும்?  புலிகளுக்கு 2009இல் பின்னடைவு ஏற்பட்டாலும் புலிகள் மீண்டெழுந்திருப்பார்கள், ஆனால் புலிப் பண்பாடு இல்லாதபடி குழுக்களின் குழு ஈழத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது  அதனால்தான் அவர்கள் மீளெழ முடியாமல் போனது.

புலிகளை  அழிப்பது அவ்வளவு எளிதானது  அல்ல. அது  இந்தியாவாலோ சிங்களத்தாலோ முடியாத காரியம்.  புலிகள் எதிரிகளைவிட மிகச்சிக்கலான அமைப்பு.   ஒரு உலக வலைப்பின்னலை உடைக்க இன்னொரு உலக வலைப் பின்னலால் மட்டுமே  முடியும்.   முடிவில் ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் உருவாக்கிய வலைப் பின்னலே  புலிகளை அழித்தது.

புலிகளின் ஒட்டுமொத்த பெருந் திட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அதை நடைமுறைப்படுத்துவதில்  சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம், அதற்காக அவர்களின் பெருந்திட்டமே தவறு என்பது ஆதாரமற்றது. இவ்வுலகில் நாம் உறுதியாக வெல்வதற்கென்று எந்த திட்டத்தையும் நம்மால் தீட்ட முடியாது. நமது வெற்றி வாய்ப்புகளைக் கூட்டுவதற்கு ஒட்டுமொத்தப் பார்வை கொண்டு பல்வேறு அமைப்புகளை உருவாக்கி பரிணமித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

வாய்ப்பு அமையும் பொழுது வெற்றி பெறுவோம். அது எப்பொழுது அமையும், எப்படி அமையும் என்று கணிக்க முடியாது. நாம் எதிர்காலத்தை நம்பிக்கயுடனே அணுக முடியும். புலிகள் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன் அணுகினார்கள். வெற்றிக்கான முழுப் பாதை தெரிந்தால்தான் செயல்படுவேன் என்றால். பிரபாகரன் ஒன்றைத் துப்பாக்கியைத் தூக்கியே இருக்க முடியாது. நாம் முடிந்த அளவு நமது செயற்பாடுகளை அறிவு பூர்வமாக முடுக்கி, நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.  இது தான் பிரபாகாரனின் பெருந் திட்டம்.

 

 

Leave a Reply