பிரசாந்தனை விளக்கமறியலில் வைக்க மட்டு நீதி மன்றம் உத்தரவு

குற்றப்புலனாய்வுத்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை-பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

ஆரையம்பதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேற்குறிப்பிட்ட கொலை வழக்கு  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

IMG 1108 பிரசாந்தனை விளக்கமறியலில் வைக்க மட்டு நீதி மன்றம் உத்தரவு

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ரீ.எம்.வி.பி கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் 2005 ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளமை கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.