பால்புதுமையினரைக் குற்றவாளிகளாக்கும் சட்டங்களை நீக்குங்கள் – ஐ.நா சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

மாற்றுப்பாலினத்தவர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பால்புதுமையினரைக் குற்றவாளிகளாகக் கருதும் சட்டங்களை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் பிரகாரம் இலங்கை அதன் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதுகுறித்து மீளாய்வுசெய்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி பால்புதுமையின சமூகத்துக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவருமாறும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்குமாறும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் அக்குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை இணங்கியிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் பால்புதுமையினர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையானது அனைத்து இலங்கையர்களுக்குமான உண்மையான சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய மிகமுக்கிய நடவடிக்கையாகும் என்றும், எனவே அப்பிரேரணைக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 106 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.