இலங்கையில் இதுவரை காலமும் இல்லாத மிகப்பெரிய சீன உதவித் திட்டமான இலங்கை தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டடம் சுகாதார அமைச்சிடம் நேற்று (25) கையளிக்கப்பட்டது.
கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஸென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எட்டு மாடிகளைக் கொண்ட இலங்கை தேசிய வைத்தியசாலையின் இந்த வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டடமானது 50,000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது தினசரி அதில் 6,000 நோயாளர்கள் அணுகக்கூடியதாக உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த கட்டடத் திட்டத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா தீர்மானித்ததாக தெரிவித்தார்.
🇨🇳🏥🇱🇰The Out-Patient Department (OPD) building of the Sri Lankan National Hospital, the largest ever China-Aid project in #SriLanka with 8 stories, 50000 square meters area & a daily access of 6000 patients, was handed over to Lanka today. It's expected to open to public soon. pic.twitter.com/BOeJuyr1CL
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 25, 2023
இந்த திட்டம் சீன அரசாங்கத்தினால் இதுவரையில் வழங்கப்படாத மிகப் பெரிய மானியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இந்த வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு ஒரு மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று கூறிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது முழுமையாக செயல்பட ஒரு வருடம் ஆகும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீன தூதுவர், சீன அரசாங்கத்தின் நன்கொடையானது இலங்கையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவைப் பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாக இந்தக்கட்டடம் உள்ளது எனத் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கு சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.