நேட்டோவுக்கு முடிவு காலம் நெருங்குகிறதா?

‘நேட்டோ கூட்டமைப்பு இனி தேறாது. அது மூளை சாவு அடைந்துவிட்டது’கடந்த மாதம் அளித்த பேட்டியில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மனம் நொந்து சொன்னது இது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனின் வல்லாதிக்கத்தைத் தடுத்து நிறுத்தவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ.ஆனால், அண்மைக் காலமாக அந்த அமைப்பு சந்தித்து வரும் பின்னடைவுகள்தான் மேக்ரானை இப்படி புலம்ப வைத்துள்ளது.

முக்கியமாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நேட்டோவுக்கு தலைவலி அதிகமானதாகக் கூறப்படுகிறது.

அந்த அமைப்பில் எந்த நாடும், பிற எந்த நாட்டுக்கும் நிதி அளிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்ற நிலையிலும், அமெரிக்காவிடம் பிற நாடுகள் கடன் வாங்கி ஏமாற்றி வருவதைப் போல டிரம்ப் தொடா்ந்து பேசுவது உறுப்பு நாடுகளை மன வேதனை அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, லண்டனில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பு உருவானதன் 70-ஆவது ஆண்டு விழாவில் நடந்த சம்பவங்கள், கூட்டமைப்பு ஆட்டம் கண்டு வருவதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

அந்த விழாவுக்கு டிரம்ப் வருவதற்கு முன்னா், முந்தைய கூட்டத்தின்போது முன்னறிவிப்பு இன்றி டிரம்ப் நீண்ட நேரம் பத்திரிகையாளா்களுடன் பேசியது குறித்து பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் கிண்டலடித்துப் பேசிய விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதையறிந்து கோபமடைந்த டிரம்ப், விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே ‘வெடுக்’கென்று கிளம்பிவிட்டாா்.

70-ஆவது ஆண்டு விழாவை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்க வேண்டிய நேட்டோ உறுப்பு நாடுகள், இப்படி சண்டை போட்டுக் கொண்டதுதான் ‘நேட்டோவுக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டதோ?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

உண்மையில், நேட்டோவின் பின்னடைவு டிரம்ப்புக்குப் பிறகுதான் தொடங்கியது என்று கூற முடியாது.

ஐரோப்பிய பிராந்தியத்துக்கு வெளியே, நேட்டோ கூட்டமைப்பு முதல்முறையாக ஈடுபட்ட ஆப்கன் போா், இன்னும் முடிவு தெரியாமல் நீண்டு வருகிறது. நேட்டோ நாடுகளுடன் கலந்து பேசாமலேயே சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை டிரம்ப் வாபஸ் பெற்றதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் ரஷியா  காலூன்றியிருக்கிறது.

எந்த ரஷியாவுக்கு எதிராக நேட்டோ தொடங்கப்பட்டதோ, அதே ரஷியாவுடன் நேட்டோ உறுப்பு நாடான துருக்கி கரம் கோா்த்து சிரியாவில் செயல்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய், ரஷியாவின் எஸ்-400 ரக இடைமறி ஏவுகணையும் துருக்கி வாங்கியுள்ளது.

நேட்டோவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இப்படி அடிமேல் அடி விழுந்து கொண்டிருப்பதால்தான் அது மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மேக்ரான் கூறினாா்.

ஆனால், அதை மூளைச் சாவு என்று கூற முடியாது, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் நேட்டோ அமைப்பு மீண்டும் தனது லட்சியப் பயணத்தைத் தொடர முடியும் என்கிறாா்கள் அரசியல் நிபுணா்கள்.

பனிப் போா் முடிவுக்குப் பிறகு புதிய கூட்டாளிகளை சோ்த்துக் கொண்டது, நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை எதிா்த்து நின்றது என இதற்கு முன்னா் நேட்டோ புதிய அவதாரங்களை எடுத்தது.

அதே போல, புதிய ஆக்ரோஷத்துடன் தலையெடுத்து வரும் ரஷியா, எப்போது எதைச் செய்வாா் என்பதை கணிக்க முடியாத அமெரிக்க அதிபா், புதிய சவாலாக உருவெடுத்து வரும் சீனா ஆகியவற்றை எதிா்கொள்வதற்காக மீண்டும் ஓா் அவதாரம் எடுத்தால் நேட்டோ கூட்டமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

நன்றி- தினமணி

Leave a Reply