தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! – முனைவர் விஜய் அசோகன்

இலங்கைத் தீவின் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சியின் தலைமைக்கு சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் வருகையினைத் தொடர்ந்து, தமிழர் ’தேசம்’ தங்களின் அரசியல் பாதை பயணிக்க வேண்டிய திசை குறித்தான விவாதத்தினைத் தொடங்கும் முன்னரே, இந்திய ஒன்றியத்தினதும் சிங்களத் தரப்பினதும் சந்திப்புகளும் காய் நகர்த்தலும் பெருவீச்சில் பறக்கத் தொடங்கிவிட்டன.

மறுபுறம், எவ்வித அரசியல் கணக்கீடுகளும் இன்றி, ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பானவர்கள், ஆதலால், இந்தியா தமிழர்கள் பக்கம் தடம் மாறுவர் என பழைய பல்லவிகள் ’சமரசவாதிகளால்’ மீண்டும் வேர்விடத் தொடங்கிவிட்டன.

இந்தியப் பெருங்கடலினை நோக்கின வருங்கால அரசியல், பொருளாதார, இராணுவ முடிச்சிகளில் தமிழர் தரப்பினை ஒரு பொருட்டாக மதிக்காத நிலை இருப்பது போல தோன்றினாலும், தமிழின அழிப்பிற்கான நீதியினை புறந்தள்ளி, தமிழர் தேச அரசியலினை மட்டுப்படுத்துதல் போன்றவைகளை காரணமாக வைத்தே சிங்களத்திடம் அனைத்து நாடுகளும் பேரம் பேசி தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றியும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

(இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டாலும் குமரியும் ஈழமும் தொடும் எம் தமிழரின் தொன்மை கடலினிலேயே நிகழ்கால பூகோள அரசியல் முடிச்சுகள் சுழல்வதால், இனி இக்கட்டுரை ’தமிழர் கடல்’ என்னும் சொல்லோடே பயணிக்கும்)

2009-2015 காலக்கட்டத்தில் மீள்கட்டமைப்பு, மாகாண சபை தேர்தல், 13ஆம் சட்டத்திருத்த அமலாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், 2009ற்கு பின்னரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை கையாளுதல் என இந்திய ஒன்றியம் மகிந்த காலத்தில் தலையிட்டு வந்தாலும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு-புலம்பெயர்ந்த அரசியல் அமைப்புகளை இணைந்தவாக்கில் கையகப்படுத்துதல், ஐ.நா மனித உரிமை அவைகளில் தீர்மான நாடகம், சிங்கப்பூர் கூட்டங்கள், மைத்திரி-ரணில் கூட்டுச்சதிகார அரசாங்க உருவாக்கம் என மேற்குல நாடுகள் அமெரிக்க ஐக்கிய அரசுகளின் ’கண்’ அசைவில் வேறுவிதமான காய் நகர்த்தலை மேற்கொண்டு வந்ததையும் நாம் அறிவோம்.

2009-2015 காலக்கட்டம் வரை தமிழர் அரசியல் பேச்சுப்பொருளாகவும் தமிழின அழிப்புக்கான ’நீதி’ விவாதப் பொருளாகவும் இருந்து வந்ததும், திடீரென்று ’நல்லாட்சி’ நாடகத்தால் வீரியம் இழந்து, தேங்கித் தேங்கி ஊர்ந்துச் செல்லத் தொடங்கியதை நாம் மறந்துவிட இயலாது.sea tigers தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! - முனைவர் விஜய் அசோகன்

தமிழின அழிப்பிற்கான நீதியினை பேசும் உரிமை, தமிழர்கள் போராடிப் பெற்றிருந்த இறையாண்மை, தமிழீழ விடுதலைப்புலிகள் மீட்டுருவாக்கம் செய்திருந்த தமிழர் தாயகக் கோட்பாடுகள், தமிழர் தேசத்தின் அரசியல் தீர்வுகள் போன்ற எம்மிடம் இருந்த பலமிக்க பேரம் பேசும் சக்தியினை இந்திய ஒன்றியத்திடமும் மேற்குலக நாடுகளிடமும் ’அடமானம்’ வைத்துவிட்ட நிகழ்கால நிலையே, 2009-2015 காலக்கட்டத்தைவிடவும், 2015-2019 காலக்கட்டத்தைவிடவும், தமிழர் தரப்பில் இருக்கும் ஆகப்பெரும் நெருக்கடியையும் சேர்த்துக் கொண்டு வந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்வோம்.

மறுபுறம் இலங்கை-இந்திய ஒன்றிய கூட்டு எத்தகையதாக இருக்கிறது?

கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றதும், அடுத்த நாளிலேயே, இந்திய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்கிறார். முதல் வெளிநாட்டுப் பயணத்தினை இந்திய ஒன்றியத் தலைநகருக்கு அமைக்கிறார் கோத்தபாய. கடந்த ஆண்டு அக்டோபரில் மகிந்த ராஜபக்சேவின் இந்திய ஒன்றியப் பயணமும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்துவிட்டு, தொடர் பேட்டிகளை இந்திய ஊடகங்களில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி) வழங்கியதும், வழக்கம் போல சுப்ரமணிய சுவாமியும் இந்து ராமும் ஆரத்தழுவி வரவேற்று ’சான்றிதழ்’ வழங்கினார்கள் என்பதனையும் நினைவுப்படுத்திக் கொள்க.

மேற்குலச் செல்லப்பிள்ளைகளின் ’நல்லாட்சி’ நாடக அரசாங்கத்தின் பின்னான இந்தோ-பசிபிக் பூகோள அரசியல் முடிச்சுகளில் இந்திய ஒன்றியத்தின் தேவையை உறுதிப்படுத்தியப்பின், மைத்திரி-ரணில்-ராஜபக்சே எவர் வரினும் இந்திய ஒன்றியத்துடனான ’நல்உறவு’ தேவை என்ற புதிய கணக்குகளால், 2013ற்கு பிறகு இருந்த மகிந்தவுடனான இந்திய ஒன்றியத்தின் பிணக்குகள் மறைந்தே ஆகவேண்டியுள்ளது என்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

டெல்லி பயணத்தின் ஊடாக, 450 மில்லியன் டாலர் நிதி உதவியினைப் பெற்றுக்கொண்ட கோத்தபாய, சீனாவின் அம்பாந்தோட்டை 99 வருட ஒப்பந்தத்தினை மாற்றியமைப்பது குறித்த சமிக்ஞையையும் வெளியிட்டு உள்ளார். சீனாவுடனான பேரத்தினை ’உரிய’ முறையில் நிகழ்த்த அடுத்தப் பயணமாக சீனாவிற்கும் செல்லவுள்ளார் கோத்தபாய.

2015 ஆம் ஆண்டு மே மாதம், கொழும்புவில் உள்ள தாஜ் கோரமண்டல் வளாகத்தில் நடந்த அரசியல் சந்திப்பொன்றில், ஐக்கிய அமெரிக்கா அரசுகளின் அரச செயலாளர் ஜான் கெர்ரி (Secretary of States, USA) அவர்கள் பேசியப் பேச்சில், பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவில் அமெரிக்க ஐக்கிய அரசுகள் மைத்திரி-ரணில் கூட்டாட்சியை ஆதரிப்பதோடு (இணைப்பையும் ஆட்சி மாற்றத்தையும் திரைமறைவில் உருவாக்கியதும்), இந்தியப் பெருங்கடலிலும் அதற்கும் அப்பாற்பட்ட இந்தோ-பசிபிக் கடல் மண்டலத்திலும், அமெரிக்கா-இலங்கை அரசுகள் அரசியல்-பொருளாதார-இராணுவ நோக்கில் ஒன்றிணைவது அவசியம் என்று உரைத்திருந்தார்.

கொழும்பில் 2017இல், வியட்நாமில் 2018இல் நடந்த ’இந்தியப் பெருங்கடல்’ கருத்தரங்கில் இலங்கையின் பிரதமர் விக்கிரமசிங்கே, ”இலங்கை, சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தங்களைத் தவிர வேறு எதனிலும் ஈடுபடாது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எதனையுமே செய்யமாட்டோம்” என்றுத் தெரிவித்திருந்தார். ஆனால், அதேவேளை, தென்கிழக்கு ஆசியாவின் முதல் இராணுவக் கட்டளை மையம் இலங்கையிலேயே இருந்தது என்றும் அமெரிக்காவினது சிந்தனை ஒப்புதல் மீதான பாராட்டுக்களையும் குறிப்பிடத் தவறவில்லை.

இவைகளுக்கு அடுத்தடுத்தக் காட்சிகள் குறித்தும், தமிழர் கடலினில் நிகழ்ந்த 3 ஆண்டுகள் அரசியல், இராணுவ, பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் இக்கட்டுரையாளர் எழுதிய ”இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் பொருளாதார முக்கியத்துவம்” கட்டுரை விரிவாக பேசுகிறது.

கோத்தபாயவின் முதல் டெல்லி பயணத்தின் பொழுதான இந்திய ஒன்றியப் பிரதம அமைச்சர் மோடியுடனான சந்திப்பின் பின், வெளியான மோடியின் ஊடகச் செய்தியில், ”இந்து சமுத்திர நன்மைக்கு இந்திய-இலங்கையின் கூட்டு முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.29gotabaya modi தமிழர் கடலும் தமிழர் அரசியலும்! - முனைவர் விஜய் அசோகன்

இந்தோ-பசிபிக் பிராந்திய அரசியலில் இலங்கைத் தீவே ஆடுகளத்தின் ஓய்வறை, அதற்கான பாதுகாப்புச் சக்தி இந்திய ஒன்றியமே என்ற நிலையில், இந்திய-இலங்கை கூட்டு வலுவாகிறது என்பதே மேலே உள்ளச் செய்திகளின் வழியே நாம் புரிந்துக்கொள்ளும் செய்தியாக இருக்கிறது.

சீனாவுடன் எதிர் போக்கையும் இலங்கை கடைப்பிடிக்காது. போர்க்காலத்திலேயே மேற்குலகம், அமெரிக்க ஐக்கிய அரசுகள், இந்திய ஒன்றியம், சீனா, ஜப்பான் என அனைவரோடும் தன் ’இறையாண்மை’யின் பலம் கொண்டு அரசியல் சதுரங்கத்தை எல்லாப் பக்கமும் காய் நகர்த்தி விளையாடிய இலங்கையின் சிங்களப் பேரினவாதத்திற்கு, 2009ற்கு பிறகு பட்ட காயங்களையும் ஆற்றத்தெரிந்த ’ராஜபக்சே’க்களுக்கு நிகழ்கால இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் இலங்கையின் பெரும்பலத்தினை வைத்து அரசியல் சதுரங்கம் விளையாடுவது இன்னும் எளிதே என்பதனையும் நினைவுப்படுத்திக் கொள்வோம்.!

2015 அமெரிக்கா முதல் 2019 மோடி வரை சொல்லும் செய்தியினை நாம் தொகுத்துப் பார்க்கும் பொழுது, தமிழர் கடல் இந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரும்பொழுது, தமிழர்கள் தமிழர் கடலின் அரசியல் முடிச்சுகளில் முறையான காய் நகர்த்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதனை உணரலாம்.

தமிழர் கடலின் அரசியல் முடிச்சுகளை நமக்கு சாதகமாக நாம் காய் நகர்த்த முனையும் முன் சில கோட்பாடுகளை நாம் வரையறுத்துக் கொண்டு விட்டுக்கொடுக்காத அரசியல் தலைமைகளை முன்னெடுக்க வைக்கவும் வேண்டும்.

  • தமிழர் தேசத்தின் இறையாண்மைக்கு எவ்வித இடர்பாடுகளும் நேரக்கூடாது.
  • தமிழர் தாயகத்தின் எல்லைகளும் கோட்பாடும் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் தரக்கூடாது.
  • தமிழின அழிப்பிற்கான நீதியினை பெறும் இழப்பீட்டு இறையாண்மையினை தமிழர் தரப்பிற்கு உறுதி செய்தல்.
  • சிங்கள ஒற்றையாட்சி அரசியலமைப்பை களைவதும் புதிய அரசியலமைப்பிற்கு வழிவகைச்செய்தலும் முக்கியம், ஏற்கனவே இருக்கும் அரசியலமைப்பில் சட்டத்திருத்த நாடகத்தினை ஏற்காது இருத்தலும் அவசியம்.
  • சிதைவுற்ற நிலத்தின், சிதைவுற்ற மக்களின் வாழ்வு, பொருளாதாரம், தமிழர் நில இறையாண்மை உள்ளிட்டவைகளுக்கு நீதியினை முன்னிறுத்தும் அதேவேளையில் வல்லரசுகள் முன்மொழிய விடாது, தமிழர் தேச சிந்தனையில் இருந்து முன்மொழியும் கோட்பாடுகளை சர்வதேசப் பேச்சுவார்த்தைகளுக்கு கொண்டு செல்லுதல்.
  • அரசியல் தீர்வுகளுக்கான எவ்வித கடப்பாடுகளும் பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் முன்மொழிதல் கூடாது…ஈழத்தமிழினத்தின் அரசியல் வேணவாவினை ஒட்டுமொத்த மக்களும் இணைந்தே வாக்குகள் மூலம் நிர்ணியக்க வழிவகை ஏற்படுத்துதல்.
  • கோத்தபாய ராஜபக்சேவுடன் இணைந்து செல்லுமாறும், பணிந்து செல்லுமாறும் சொல்லப்படும் சர்வதேச அழுத்தங்களை புறக்கணித்தல்.
  • சிங்கப்பூரிலும் லண்டனிலும் நடந்த ரகசிய சந்திப்புகளை சர்வதேச சமூகம் நடத்தாமல் வெளிப்படையான அரசியல் தீர்வுப் பேச்சுக்களை நடத்த முன்மொழிதல்.
  • முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போருக்கு முன் தயாரிப்பிலும் பிந்தைய மட்டுப்படுத்தும் ஐ.நா மனித உரிமை அரசியலிலும் பங்குப்பெற்ற அமெரிக்கா சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் வெளிப்படையான நடுநிலைத்தன்மை வகித்தலுக்கு கோரிக்கை விடுத்தல்.

இப்படியான, இன்னும் மேம்படுத்தக்கூடிய கோட்பாடுகள் வரையறுத்து, உறுதிப்பட ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள் மட்டுமே இந்திய ஒன்றிய, அமெரிக்க ஐக்கிய அரசுகள், மேற்குலக நாடுகளின் உடனான அரசியல் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும். அத்தகையச் சூழலே, எமக்கான நகர்வினை மேம்படுத்தி, முன்னகர்த்தும்!