நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நெடுந்தீவு பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு பாரிய மனித படுகொலை தொடர்பில் இதன்போது பதிவு செய்ய விரும்புகின்றேன்.
மிக முக்கியமாக ஐந்து வயோதிபர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.திருமதி நாக சுந்தரி கார்த்திகேசு (83 வயது).இவரது கணவர் குமுதினிப் படகில் வைத்து கடற்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டவர்.
நாகநாதி பாலசிங்கம் (82 வயது),கண்மணிப்பிள்ளை பாலசிங்கம்(76 வயது),இவர்கள் இருவரும் கணவன்,மனைவி.நாகரத்தினம் வேலாயுதபிள்ளை (78 வயது) மற்றும் சுப்பிரமணியம் மகாதேவா (74 வயது) ஆகியோர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த ஐந்து பேரும் ஒரு நபரால் கடற்படையினரின் முகாமுக்கு அருகில் உள்ள வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேநேரம் 100 வயதுடைய மூதாட்டி பூரணம் கனகர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கே கடற்படை முகாம் உள்ளது. அதன் அருகில் நெடுந்தீவு மண்ணில் யாரும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு பிரதேசத்தில் மிக கொடூரமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இது இந்த ஆண்டில் நடந்த மிகப்பெரிய படுகொலை.இது நியாயமாக,நீதியாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த படுகொலைக்கும் கடற்படை,இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும்.இந்த நாட்டில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த சம்பவமும் உறுதிப்படுத்துகின்றது.
அத்துடன் கிளிநொச்சி கௌதாரி முனையில் இருக்கின்ற மண்ணை அகழ்வதற்காக அஜித் தென்னக்கோன் என்பவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விசேடமான உத்தரவின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த மண்ணை அகழக்கூடாது என்ற கட்டளை இருக்கும் நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் பூநகரி பிரதேச செயலாளரை வைத்து அவருக்கூடாக அந்த மண்ணை அகழ்ந்து விற்பனை செய்வதற்கான முயற்சியில் வடக்கு ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயத்தையும் இந்த சபையில் பதிவு செய்கின்றேன். மிக முக்கியமாக ஜீவன் தியாகராஜாவின் நிதி நடவடிக்கைகள் அவர் செய்கின்ற ஊழல் நடவடிக்கைகள் மற்றும் அரச நடவடிக்கை துஸ்பிரயோகங்கள் தொடர்பாகவும் இந்த சபை கவனம் செலுத்த வேண்டும் என்றார்.