நீராவியடி விவகாரத்தில் உலகெங்கும் உள்ள தமிழ் சட்டத்தரணிகளின் தோழமை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பு !!

கடந்த செப்டம்பர் 23 திங்களன்று தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவில் உள்ள சிறிலங்காவின் நீதிமன்றத்துக்கு வெளியே, தமிழ் சட்டத்தரணிகளுக்கு எதிராக சிறிலங்கா காவல்துறை அனுசரனையோடு சட்டம் குறித்தோ, தண்டனை அச்சமோ ஏதுமன்றி நடத்தப்பட்ட வன்முறை தொடர்பில், ஐ.நா சிறப்பு அறிக்கையாளரை நோக்கி உலகெங்கும் உள்ள தமிழ் சட்டத்தரணிகளின் அணிதிரட்டும் முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
வன்முறைக்கு வழிசெய்த சிறிலங்காவின் நீதிமன்றத் தடையாணை, அரசு ஒப்புதலோடும் சிறிலங்கா காவல்துறை அனுசரனையோடும் வெளிப்படையாக மீறப்பட்டது என்பதனைத் சுட்டிக்காட்டி, நீதிபதிகள், சட்டத்தரணிகளின் தற்சார்பு குறித்த ஐநா சிறப்பு அறிக்கையாளர் திரு.தீகோ கார்சியா சயன் அவர்களுக்கு விண்ணப்பமளிக்கும் வகையில் இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
பிரித்தானியா, கனடா, தமிழ்நாடு, பிரான்ஸ்,தென்னாபிரிக்கா என உலகெங்கும் உள்ள சட்டவாளர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர்.
காலதாமதமின்றி இலங்கைத்தீவுக்கு பயணம் செய்யுமாறு வலியுறுத்தும் இவ்விண்ணப்பமானது, சிறிலங்காவின் நீதித்துறையில் தமிழ் நீதிபதிகளின் தற்சார்பும், தமிழ் சட்டத் தரணிகளின் பாதுகாப்பும் அப்பட்டமாகவும் வரலாற்று முகமையாகவும் மீறப்பட்ட நிகழ்வுகளைப் புலனாய்வு செய்யவும் ஆவணப்படுத்தவும் அறிக்கையிடவும் இவ்விண்ணப்பம் வலியுறுத்துகின்றது.
சிறிலங்கா காவல்துறைப் பாதுகாப்புடன் நீதிமன்றத் தடையாணையை வெளிப்படையாக அவமதித்த குழுவின் தலைவராக வந்தவர் பௌத்த இனவாத அமைப்பின் பொதுச்செயலாளர் தீவிரவாத பௌத்த பிக்கு ஞானசாரர் ஆவார். இந்த ஞானசாரர்தான் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டு அண்மையில் அதிபரால் மன்னிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் என்பது நோக்கற்பாலது. சிறிலங்காவின் செயலாட்சித்துறை நீதித்துறையின் தற்சார்பில் குறுக்கிடுவதற்கு இது இன்னுமோர் எடுத்துக்காட்டாகும்.
சிறிலங்கா தமிழர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் ஆட்களைத் தொடர்ந்து பாதுகாத்தும் அதிகாரமேற்றியும் வருகிற இனநாயகமே தவிர ஜனநாயகம் அல்ல என்பதால், சிறிலங்காவின் நீதித்துறையில் காணப்படும் அமைப்புசார் இனப்பாகுபாட்டை ஆய்ந்து ஆவணப்படுத்துமாறும் ஐநா சிறப்பு அறிக்கையாளர் திரு. கார்சியாசயான் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விண்ணப்பம் கேட்டுக் கொண்டுள்ளது.
‘சிறிலங்காவில் பௌத்த சிங்களர்களுக்கு ஒன்றும், தமிழர்களுக்கு ஒன்றுமாக இரு நீதியமைப்புகள் உள்ளன. சரியாகச் சொன்னால், ஒன்று நீதியமைப்பு, மற்றொன்று அநீதியமைப்பு. 1958ஆம் ஆண்டுக் கொலைகாரக் கலகங்கள் முதல் போர்க்காலத்திய சித்திரவதைக் கொடுமைகளூடாக இன்று தொடரும் தமிழ் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் ஈறாக இதுவரை நிகழ்த்தப்பட்ட அரசுக் குற்றங்களுக்காகத் தமிழர்களுக்கு நீதி வழங்கத் துப்பில்லாத அநீதியமைப்பு’ என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவ்விண்ணப்பதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘பன்னாட்டுக் கண்காணிப்பு தொடரா விட்டால் தமிழ் சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்படுவதும் தாக்கப்படுவதும், தமிழர்களுக்கு ஆதரவான  நீதிமன்ற ஆணைகள் மீறப்படுவதும் அரசுக்கு வாடிக்கையாகி விடும். நீதித்துறை இலங்கைத் தமிழர்களுக்குத் தொடர்ந்து நீதி மறுக்கும். குற்றங்கள் தண்டிக்கப்பாடாத நிலையே கோலோச்சும். இதற்கு மாறான அறிக்கை இல்லாத நிலையில் சிறிலங்கா குடியாட்சியத்துக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், மனிதவுரிமைகளுக்கும் அடிப்படையான பன்னாட்டளாவிய நெறிமுறைகளை மீறிக்கொண்டே சிறிலங்கா தன்னை இணக்கமான ஐ.நா உறுப்பு நாடு என்று தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்  பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவ்விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார்.
மரபுவழித் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான முல்லைத்தீவில் இந்துக் கோயில் வளாகத்தில், பௌத்த ஈமச் சடங்குகள் செய்வதைத் தடை செய்யும் ஆணையாகும். குற்ற நோக்கங்கொண்ட பௌத்த சமயக் குழுவினர் நீதிமன்றத் தடையாணையை வெற்றிகரமாக மீற முற்பட்ட போது அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறிலங்கக் காவல்துறையினர் அவர்களைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. மாறாக, தடையை மீறி ஈமச்சடங்குகள் செய்த குழுவிற்குக் காவல் வேலை செய்து, தமிழர்கள் அப்பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுக்கவும் செய்தனர். அடுத்து, அக்குழுவினர் அங்கிருந்த தமிழ் சட்டத்தரணிகளை வம்புக்கிழுத்து நேரடியாகவே தாக்கிய போது, காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தடையாணை பெறுவதற்காக உழைத்த இந்தச் சட்டத்தரணிகள் சட்டப்படியான ஆணையை மீறித் தகனம் நடப்பது ஏன் என்று கேள்வி கேட்க முயன்றார்கள். பௌத்த பிக்கு ஒருவர் தமிழர்களின் ஏதிர்ப்பை எள்ளி நகையாடும் விதத்தில், சிறிலங்காவில் பௌத்த பிக்குகளே தலைமையிடம் வகிப்பதாகக் கூறியிருப்பது உண்மையை உடைத்துச் சொல்வதாகும்.
மேலும் அவ்விண்ணப்பதில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
தமிழர்கள் வழிபடும் இந்துக் கோயிலின் புனிதத் வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் தகனத்தைத் தடை செய்யும் நீதிமன்ற ஆணையைத் தெரிந்தே வேண்டுமென்றே ஒரு குழுவினர் வெளிப்படையாக மீறுவதற்குத் துணைசெய்யப் பதிற்றுக்கணக்கான காவல்துறையினரை நிறுத்துவது ஜனநாயகத்தின் பாலும் தமிழ் மக்கள்பாலும் சிறிலங்காவின் குரோதத்தை ஐயத்துக்கிடமின்றி விளக்கிக் காட்டுகிறது.
நீதித்துறை சட்டப்படி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கு சாதகமாக இருந்தால் அதனைச் செயலாக்க இலங்கைத் தீவுக்குள் இடமில்லை என்பதனையே செப்டம்பர் 23ம் நாள் தமிழ் சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதும் உரிய நீதிமன்ற ஆணை மீறப்பட்டதுமான சூழல்கள் வெளிக்காட்டும் உண்மை.
செப்டம்பர் 23ஆம் நாள் நிகழ்ந்தவை ஒரு தனித்த சம்பவம் அன்று. பார்க்கப் போனால், பௌத்த சிங்கள இனநாயக அரசின் செயல்நிரலுக்குப் பயன்படும் வகையில் சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சியும் அதிகாரப் பிரிப்பும் மனிதவுரிமைகளும் அப்பட்டமாக அவமதிக்கப்படுவதன் நீண்ட வரலாற்றில் மிக அண்மைய நிகழ்வே இது’ என நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இந்தசச் சம்பவம் உலகெங்கும் சட்டத்தரணிகளையும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களையும் அறச் சீற்றம் கொள்ளச் செய்துள்ளது.
இந்தச் செயல்களுக்கு பதில் சொல்லத்தான் வேண்டும். ஈழத்தமிழ் சட்டத்தரணி ஒருவர் மீதான தாக்குதல் என்பது அனைத்துத் தமிழீழச் சட்டத்தரணிகளும் தங்கள் சட்டக் கடமைகளைச் செய்ய விடாமல் அச்சுறுத்துவதாகும். பன்னாட்டுச் சமுதாயம், குறிப்பாக மனிதவுரிமைக் காவலர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் நிறுவனங்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கத் தகாது. இவை போன்ற நிகழ்வுகளில் மௌனம் காப்பதுதான் சட்டம், தண்டனை பற்றிய அச்சமின்றிக் குற்றங்கள் கோலோச்ச இடமளிக்கிறது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.