நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்

89 Views

இலங்கையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக சுமார் 40 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நோக்கத்துடன் 1983 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறைகளில் இருந்து நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.dissapear tamil நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? - பி.மாணிக்கவாசகம்குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகத் தலையெடுத்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக ஆட்களைக் காணாமல் செய்வதை ஒரு தாக்குதல் உத்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்கின்ற கிராமிய மற்றும் பிரதேச மட்டத்திலான குடிநிலைசார் தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் முக்கியமாக இளைஞர் யுவதிகளும் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதனைவிட விபரம் அறிய முடியாத முறையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று சரணடைந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளும் காணாமல் போயுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களாக இருந்த போதிலும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்குகின்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்குகின்ற குற்றச் செயல்கள் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும்’ என்று இலங்கையின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 –1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

‘மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைக்க வேண்டும். அதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சுதந்திரமாகச் செயற்படுகின்ற விசேட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்கான நீதி விசாரணைகள் 1983ஆம் ஆண்டிலிருந்து 2014 வரையான காலகட்டத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசேட நீதிமன்றம் அமைத்தல் வேண்டும்’ என ஐநா மன்றத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் அந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த உறுதி இன்னுமே நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தையே காணாமல் ஆக்குவதற்கான முயற்சிகளிலேயே ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஐநா மனித உரிமைகள் பேரவையாகிய சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய நிலைமாறு கால நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறைகளில்; ஒன்றாக காணாமல் போனோருக்கான அலுவலகமும்  காலம் கடந்த நிலையிலே உருவாக்கப்பட்டது. அந்தப் பொறிமுறை வடிவமைக்கப்பட்ட போதிலும், அந்த அலுவலகம் இடம் குறித்து உடனடியாக அமைக்கப்படவில்லை. அத்துடன் அந்த அலுவலகத்திற்கான ஆளணிகளை நியமிப்பதையும் ஆட்சியாளர்கள் இழுத்தடித்திருந்தார்கள்.
missing 1 நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? - பி.மாணிக்கவாசகம்காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனாhல் அந்த நிபந்தனையை அரசாங்கம் முறையாகக் கவனத்தில் எடுத்துச் செயற்டவில்லை.

அது மட்டுமல்லாமல் அந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள், அதன் மூலம் திரட்டப்படுகின்ற விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற விடயங்கள் நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படவும் மாட்டாது. அத்துடன் அந்த விடயங்களை முன்னிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவும் மாட்டாது என்றவாறான விடயங்களை உள்ளடக்கி காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை யார் கொண்டு சென்றார்கள், எங்கு, ஏன் அவர்களை மறைத்து வைத்திருந்தார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகளை சட்டடத்தின் முன் நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்;டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு வழங்கி, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இனிமேலும் இடம்பெறாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கருத்து. உறுதியான நிலைப்பாடு. ஆனால் இதற்கு நேர்மாறாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு உருவாக்கியது.

மக்களுடைய எதிர்பார்ப்பும், ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மான வரையறைகளும் காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் அரசாங்கத்தினால் உரிய முறையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அத்துடன் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதற்கும், அந்த விடயத்தில் நீதியை நிலைநிறுத்துவதற்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம்; ஒருபோதும் உதவமாட்டாது என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அலுவலக உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கத்திலும், அதனைச் செயற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கொழும்பிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் அந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரகசியமாகவும், நேரம் கெட்ட வேளையாகிய அதிகாலையிலும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை நாடிச் செல்லவில்லை. இதனால் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கம் அமைந்துவிட்டது,

ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதென்பது மிக மோசமானதொரு குற்றச் செயலாகும். இது கொலைக்குற்றத்தைவிட மோசமானது. கொலை செய்யப்படும்போது இறந்தவருடைய சடலம் கிடைக்கின்றது. ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் முழுமையாகத் தெரியவராத போதிலும் அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது. குற்றச் செயல் நடைபெற்றிருக்கினற்து என்பதும் வெளிப்படையாகின்றது.

ஆனால் காணாமல் ஆக்கப்படுவதில் காணாமல் போயிருப்பவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாமல் போகின்றது. யார் அவரைக் காணாமல் ஆக்கியது என்பதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. மேலும் காணாமல் போனவருடைய குடும்பத்தினர் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கும் மன ஏக்கங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகின்றார்கள். இது ஒருவகையில் அவர்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதற்கு ஒப்பானதாகும்.

இதனாற்தான் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐநா மன்றமும் அதனை ஒரு குற்றச் செயலாக வரையறை செய்திருக்கின்றது. அத்துடன் அதுவொரு மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. உண்மையில் இது ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. உலகில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கை அது குறித்து இன்னுமே அலட்டிக் கொள்ளாத கல்லுளி மங்கன் போக்கிலேயே சென்று கொண்ருக்கின்றது.

இந்த நிலையில்தான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்குதல்களுக்கு மத்தியில் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான போராட்டம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 2000 நாட்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நீதியைத் தேடும் அந்தப் போராட்டம் இன்னும் எத்தனை ஆயிரம் நாட்களைக் கடக்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை.

 

Leave a Reply