நந்திக்கடல் பேசுகிறது´´ தமிழின வரலாற்று ஆவண நூல்வெளியீடும் தியாக தீபம் திலீபன் நினைவு வணக்க நிகழ்வும் நேற்று யேர்மனியின் Dortmund நகரில் நடைபெற்றது.
பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு – பிரேமன் ஐச் சேர்ந்த திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள். தமிழீழத் தேசியக்கொடியை தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.ஆனந்தராஜா ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.கனகேஸ்வரன் ஏற்றிவைத்தார். தொண்டு நிறுவன இயக்குநர் திரு.டயஸ் அவர்கள் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மலர் மற்றும் சுடர் வணக்கம் நடைபெற்றது. செல்வி இலக்கியா அவர்களது தாயகப்பாடல் உணர்வுபூர்வமாக மேடையில் ஒலித்தமை அனைவரினதும் வரவேற்பைப்பெற்றது. செல்வி நிலா அவர்களது விடுதளை நடனமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்றது.
´´நந்திக்கடல் பேசுகிறது ´ எனும் நூல் தமிழினப் படுகொலையின் ஆவணங்களைச் சாட்சிகளூடாகத் தாங்கி வந்திருப்பதோடு மட்டுமன்றி, பின்போர்க்காலத்தின் விளைவுகளையும் தெளிவுபடுத்தி உரைக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இன அழிப்பின் பின்னர், இன அழிப்பின் நிகழ்கால நடைமுறைகள் பேசப்படாது தவறவிடப்பட்ட கடந்த பத்துஆண்டுகளைப் பேசுவதே இந்நூலின் முக்கியநோக்கமாகும், போராளிகள், பேராசிரியர்கள், கோட்பாட்டாளர்கள், தமிழ்/சிங்கள ஊடகவியலாளர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோர் ஆதாரங்களோடு பின்போர்க்காலத்தின் விளைவுகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, நந்திக்கடலில் குரலாக ஒலித்திருக்கிறார்கள்.
நூலிற்கான முகவுரியை பேராசிரியர் வண.ஜூட் லால் அவர்கள் எழுத, நாற்பது கட்டுரைகள் நூலை அணிசெய்கின்றன. நிலப்பறிப்பு, தொன்ம அடையாளங்கள் அழிக்கப்படுதல், கணவனை இழந்த பெண்களின் நிலை, போராளிகளின் நிலை, நெய்தல் மீதான சிங்களச் சூறையாடல், நந்திக்கடல் கோட்பாடு, இனப்படுகொலை, பெற்றோரை இழந்த குழந்தைகள் நிலை, தமிழ்ச் சிறைக்கைதிகள் நிலை, ஆகிய கட்டுரைகள் தமிழின அழிப்பின் ஆவணங்களாக்கப்பட்டுள்ளன. நூலின் தொகுப்பாசிரியரும், ஊறுகாய் இணையத்தளத்தின் நிர்வாகியுமான திரு.ஜெரா அவர்கள் காணொளியூடாக உரையாற்றியதோடு நூலின் அவசியம் பற்றித் தனது கருத்தினைப் பகிர்ந்துகொண்டார்.
நூலிலுள்ள கட்டுரைகளைத் தமது அனுபவங்களோடு விதந்துரைந்தனர், திரு.இரவீந்திரன் (அகரம் மற்றும் ஐ.த.வானொலி இயக்குநர்), திரு.தவா ( தமிழ் டைம்ஸ் ஆசிரியர்), திரு.சபேசன் ( தமிழர் அரங்க நிர்வாகி), திரு.ஏலையா முருகதாசன் ( தலைவர் அனைத்துலகப் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்) , திரு.ஈழப்பிரியன் (கவிஞர்), ஆகியோர். தொடர்ந்து உரையாற்றிய திரு.விராஜ் மெண்டிஸ் அவர்கள் இந்நூல் பற்றிக் குறிப்பிடுகையில், உலகெங்கும் வாழுகின்ற தமிழ் இளையோர்கள் (Diaspora) தவறவிட்ட களப்பணியின் விளைவுகளை இந்நூல் சுட்டிநிற்பது முக்கியமான அம்சமென்றும், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட அந்தச் செய்தி, தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்றும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் பாசண அபயவர்தன அவர்கள் தமது உரையில், நிலமும் களமும் என்றென்றும் தமிழரின் அடையாளம் என்றும், நகரும் அரசியற் சூழலைத் தப்பாது கணித்திருக்கும் ´ நந்திக்கடல் கோட்பாடுகளை´ இந்நூல் தாங்கி வருவது இனிவரும் நாட்களில் தமிழர்களுக்கான வழிகாட்டலுக்கு மிகவும் அவசியமானது என்றும் குறிப்பிட்டார். இறுதியாக நூலின் மொத்த உள்ளடக்கத்தையும் தமிழீழத் தேசிய உணர்வாளரும் அறிவிப்பாளருமான திரு.வலன்ரைன் அவர்கள் தமது எண்ணக்கருத்தோடு விதந்துரைத்தமை சிறப்பாக அமைந்தது.
ஊடகவியலாளர் பாக்ஷண அபயவர்தன அவர்கள் ´நந்திக்கடல் பேசுகிறது´ நூலை வெளியிட்டு வைக்க, உறவுகள் பலர் மேடையில் நூலை அவரது கையால் பெற்றுக்கொண்டனர். குறித்த அளவில் பிரதிகள் அச்சிடப்பட்டமையால் பலருக்குப் பிரதிகள் கிடைக்கவில்லை என்பதன் அடிப்படையில் யேர்மனியில் வெவ்வேறு இடங்களில் வெகுவிரைவில் நந்திக்கடல் பேசவிருக்கிறது என்பதையும் அறியத்தருகின்றோம்.