தொலைவில்லை துருக்கி, சிரியா!-தோழர் தியாகு

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி - சிரியா : பேரிடர் மீட்பு படையை  அனுப்பிய இந்தியா

துருக்கியில் நிலநடுக்க அளவையில் 7.8 என்ற அளவிலான பெரும் நிலநடுக்கம் நேற்று திங்கள் விடிவதற்கு சற்றுமுன் நிகழ்ந்தது. சரியாக 9 மணி நேரம் கழித்து 7.6 என்ற அளவில் இரண்டாம் நிலநடுக்கம் நிகழ்ந்தது. ஏற்கெனவே போரினால் சின்னபின்னமாக்கப்பட்டுள்ள அண்டை நாடான சிரியாவையும் இந்த நிலநடுக்கப் பேரிடர் தாக்கியுள்ளது. துருக்கியிலும் சிரியாவிலும் 4,000 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக இதுவரை வந்துள்ள செய்திகள் உறுதி செய்துள்ளன. பல்லாயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

துருக்கியின் அரசுத் தலைவர் ரிசெப் தாயிப் எர்டோகன்… உயிரிழந்தோர் தொகை தொடர்ந்து உயரக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.

உலகமே துருக்கியின் துயரத்தில் பங்கு கொள்வதோடு தேவையான உதவிகளையும் உடனே அனுப்ப வேண்டும். 45க்கு மேற்பட்ட நாடுகள் வல்லுநர்களையும் மீட்புப் பணியாளர்களையும் அனுப்ப உறுதியளித்துள்ளன. இந்தியாவும் துயர்தணிப்புக் குழுக்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நூறாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை எனப்படுகிறது. 1939ஆம் ஆண்டு 33 ஆயிரம் உயிர்களைக் காவுகொண்ட ஏர்சின்கன் நிலநடுக்கத்தை எர்டோகன் நினைவு கூர்ந்துள்ளார்.

1999ஆம் ஆண்டு 7.6 அளவில் ஒரு நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் அதையொட்டிய மாகாணங்களைத் தாக்கிய போது 17 ஆயிரத்துக்கு மேல் உயிரிழந்தனர்.

துருக்கி, சிரியா நாடுகளில் பல கட்டடங்கள் அட்டை வீடு போல் நொறுங்கிக் கிடக்கின்றன. சில நகரங்களே தரைமட்டமாகியுள்ளன. சிரியாவில் ஒரு பகுதி அரசுக் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி அரசு எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஆழிப் பேரலையின் போது இலங்கையில் காணப்பட்டது போன்ற நிலைதான்.

ஆளும் அரசுகள் இயற்கைப் பேரிடர்களைக் கூட ஆதிக்க அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முயலக் கூடும் என்பதற்கு இலங்கை ஓர் எடுத்துக்காட்டு. துயருற்ற மக்களுக்குத் தேவையான எல்லா உதவியும் ஐநாவே தன் பொறிமுறைகளின் வழி நேராகத் தலையிட்டுச் செய்ய வேண்டும்.

இன்னமும் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சமும் காலத்தாழ்வின்றி மீட்டாக வேண்டும். இல்லையேல் அவர்கள் மெல்லச் சாவார்கள் என்பதை நினைக்கவே மனம்பதறுகிறது.

துருக்கி உலகின் படுமோசமான நிலநடுக்க இடர் மண்டலம் ஒன்றில் இருப்பது தெரிந்த செய்தி. ஆனால், நிலநடுக்கத்தைத் தடுக்கும் அளவுக்கு நாம் வளரவில்லை என்றாலும், வருமுன்னறிந்து உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட வழியில்லையா? எந்நேரமும் நிலநடுக்கம் வரலாம் என்றுணர்ந்து அதற்கேற்ற வடிவமைப்புடனும் கட்டும்பொருள் கொண்டும் வீடுகளும் கட்டடங்களும் அமைத்துக் கொள்ளக் கூடாதா? துருக்கியில் நிலநடுக்கத்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட, நிலநடுக்க இடர்முனைப்புப் பகுதிகளுக்குரிய கட்டுமான நெறிகள் கடைப்பிடிக்கப்படாமையும் ஒரு காரணம் என்பதை  அந்நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சர் ஏற்றுக் கொள்கிறார்.

துருக்கியிலும் சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதே லெபனான், ஜோர்தான், இராக், இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. கட்டடங்கள் ஆடிய போது மக்கள் தெருக்களுக்கு ஓடியுள்ளனர்.

இந்த நிலநடுக்கங்கூட ஏதிலியரை (அகதிகளை)  அலைக்கழித்திருப்பதைக் கொடுமையிலும் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். துருக்கியில் 37 இலட்சம் சிரியா நாட்டவர்கள் ஏதிலியராகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே இதுதான் ஆகப் பெரிய ஏதிலிக் கூட்டம். இவர்களும் நிலநடுக்கத்தால் தாக்குண்டுள்ளனர். 12 ஆண்டுகளாகத் தொடரும் கொடிய போரினால் தாக்குற்ற பகுதிகளும் நிலநடுக்கத்தால் நடுங்கியுள்ளன.

1935ஆம் ஆண்டு பலூச்சிஸ்தானில் குவெட்டா நகரத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது பாவேந்தர் பாரதிதாசன் மனம்வருந்தி எழுதிய வரிகள் ஈண்டு நினைவுகூரத்தக்கவை. தேடினேன், கிடைக்கவில்லை. தாழி அன்பர் யாரேனும் எடுத்து அனுப்பினால் நன்று.

நன்றி- தாழி