பார்வை மாறினால் பாதை மாறும் -கவிதா ஆல்பர்ட்

இராமன், சீதையின் முதல் பார்வையில் காதல் பிறக்கிறது. நாடுகளின் பகைமைப் பார்வையில் போர்கள் பிறக்கின்றன.

மழலையின் முதல் விழி திறப்புப் பார்வையில் மகிழ்ச்சி பிறக்கிறது. இலட்சியவாதிகளின் பார்வையில் சாதனை பிறக்கிறது. கதிரவனின் பார்வையில் ஒளி பிறக்கிறது. இப்படி ஒவ்வொன்றின் பார்வையிலும் ஒவ்வொன்று பிறக்கிறது. பார்வையின் நோக்கத்தைப் பொறுத்து அதன் பயன் அமைகிறது.

அனைத்தையும் படைத்த கடவுள் தான் படைத்த யாவும் நல்லது எனப் பார்க்கிறார். கழுகு தன் கூரிய பார்வையால் தனது இரையைக் கவர்ந்து செல்கிறது. இப்படிப் பார்வையைப் பொறுத்து, இவற்றின் பாதைகள் மாறுகின்றன. ஆனால் உயர்திணையான மனிதனின் பார்வைகள் மட்டும் வானளாவப் பரந்து விரிகிறது.

மனிதனுக்குப் பார்வையையும் மதிப்பிடும் திறமையையும் பார்வைகளை விரிவுபடுத்தும் ஆற்றலையும் கொடுத்தது கடவுள். எத்தனையோ சூழ்நிலைகளில் கடவுள் மனிதனுக்கு உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் மனிதன் துன்பத்தில் புல்லைப் போல வாடிவிடுகிறான். அப்போது “கடவுளே என்னைக் காப்பாற்று” என்று கடவுளின் கருணையை நாடுகிறான். துன்பத்தின் நிழல் மறைந்து இன்பத்தின் நிழல் படரும் போது, அவனது பார்வையில் மாற்றம் தோன்றுகிறது. எதார்த்த நிலையில் பாதை தெரியாத ஒரு பயணம் தொடர்கிறது. அதில் பாதையைக் கண்டுபிடித்தது போன்ற இறுமாப்பும் அவனோடு இணைந்துகொள்கிறது.

தான் எண்ணியபடி நாடுகளையெல்லாம் தன்வயப்படுத்திய  மாவீரன் அலெக்சாண்டர் கடல் அருகில் நின்றுகொண்டு, “அலைகளால் ஆர்ப்பரிக்கும் கடலே, நீயும் ஒரு நாடாக இருந்திருந்தால் உன்னையும் நான் அடக்கி, அடிமைப்படுத்தியிருப்பேன்” என்று கூறுகிறான். வெற்றிகள் அவனது பார்வையை மாற்றுகிறது. அவனது பாதையையும் மாற்றுகிறது.

33 ஆண்டுகளே உலகில் வாழ்ந்து அவன் மரணத்தை முத்தமிடும் நிலை வருகிறது. அப்போது அவனது பார்வை மாறுகிறது. வாழ்வின் நிலையாமையை உலகிற்குச் சொல்லிச் செல்கிறான். 5 வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் பார்வையில் முதிர்ச்சி வந்துவிடுகிறது. அதனால் தான் அவரது  ஆண்மையைப் பாம்பு இரசித்தது என்று கூறுவர்.

12 வயதில், இயேசு, ஞானிகள் நடுவே அமர்ந்து போதிக்கத் தொடங்கிவிட்டார். அவரது பார்வையும் மாறியது. பாதையும் மாறியது. இன்று நமது இளையோரின் பார்வையில் தயக்கமும் தடுமாற்றமும் முன் நிற்கிறது. ஏனென்றால் அவர்கள் விரும்பிய கல்வியைக் கற்கும் நிலை மாறி சவால்கள் நிறைந்த உலகோடு போராடும் நிலைக்கு பார்வைகள் மாற வேண்டிய நிலையில் நாமிருக்கிறோம்.

ஆயினும், இளையோரே. நீங்கள் தான் எதிர்காலம். நிகழ்காலமும் அதனோடு தொடர்புடைய உலகமும் உங்களைக் கடந்து போகும். இப்போதே நீங்கள் பார்வை பெற வேண்டும். ‘ஏன் என்ற கேள்வி கேட்காத வாழ்க்கை இல்லை’ என்பது கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்.

உலகில் நடைபெறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்குங்கள். ஏன்?, எதற்காக? என்ற கேள்விகளைக் கேளுங்கள். பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனால் தான். நாம் தலையாட்டிப் பொம்மைகளாகவும் பணம் கிடைக்கிறது என்பதற்காக நாம் செய்கின்ற செயலின் தன்மை குறித்து ஆராயமல் செயலின் முடிவில் ஆபத்தைத் தேடிக்கொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது.

நமது பார்வையின் வீரியத்தை, மதிப்பை நாம் உணர வேண்டும். நாம் பார்க்க விரும்பாத கடிவாளம் போட்ட ஒரு சந்ததியை உருவாக்க நினைத்தோமானால் மாற்றுத் திறனாளி மனநிலைக்கு நாமும் நமது சந்ததியினரும் தள்ளப்பட்டு விடுவோம். உலகத்தில் இருக்கும் தலைவர்களை உற்றுப்பாருங்கள். அவர்களின் பாதையையும் பயணத்தையும் உற்றுப் பாருங்கள்.

பெர்னாட்ஷாவை அவரது நாட்டு இளவரசி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவரிடம் வந்து தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அவரிடம் பெர்னாட்ஷா நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்கிறார்.

அதற்கு அவ்விளவரசி “ நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டால் என்னைப் போல் அழகாகவும் உங்களைப் போல் அறிவுடனும் ஒரு குழந்தை பிறக்கும்” என்று பதிலளிக்கிறார். அதற்குப் பதிலளித்த பெர்னாட்ஷா, “உங்களை நான் திருமணம் செய்துகொண்டால் என்னைப் போல் அழகின்றியும், உங்களைப் போல அறிவின்றியும் ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வது” என்று கேட்டு அதனைத் தடுத்துவிடுகிறார்.

நாம் நமது வாழ்க்கையில் கிணற்றுத் தவளைகளாக வாழாமல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்வையிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இது தான் நம்மை எப்போதும் பண்பட்ட பக்குவமான நிலையில் வைத்துக்கொள்ள உதவும். பார்வை தெளிவானால் தான் பாதைகள் தெளிவாகும்.

முகத்தைப் பார்க்கும்  நாம் பெரும்பாலான நேரங்களில் அகத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். அதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பின்னடைவுகளுக்கும் நம்மை அழைத்துச்செல்கிறது. நமது பார்வை அகத்தை நோக்கியதாக அமையும் போது தான் உண்மை முகம் உலகிற்குத் தெரிகிறது. உண்மை முகம் உலகிற்குத் தெரியும் போது தான் உலக வரைபடத்தை நாம் வரையறுத்துப் புதிய பாதைகளை வடிவமைக்க முடிகிறது.

எனவே இன்றைய இளையோரின் பார்வை விஞ்ஞானத்தையும், அதன் விந்தைகளையும் நோக்கிச் செல்வது நல்லது தான். ஆனால் அது எதை நோக்கிப் பயணிக்கப் போகிறது? அதன் முடிவு எதில் இருக்கப் போகிறது என்று அறிந்திருப்பது இளையோர் ஒவ்வொருவரின் கடமையும் கனவுமாக இருக்க வேண்டும்.

காரணம் நீங்கள் இன்று விதைக்கும் விதைகளின் பலனைத் தான் உங்கள் சந்ததியினர் அறுவடைசெய்யப் போகின்றனர் என்பதை நீங்கள் உணர வேண்டும். பணமும் பகட்டான வாழ்வும் தான் உங்கள் பார்வையாக இருக்குமானால் கொரோனா போன்ற ஒரு நெருக்கடி நிலையில் உலகமும் நிலைதடுமாறும். நீங்களும் நிலைதடுமாறிப் போவீர்கள்.

ஆகவே உங்கள் பார்வை மனிதநேயம் சார்ந்ததாக, இயற்கை வளத்தைப பாதுகாப்பதாக, ஒட்டுமொத்த உலகைப் பாதுகாப்பதாக இருக்குமாயின் உங்களுக்கான பாதைகள் மாறும். பயணங்கள் தொடரும். தடைகள் எத்தனை எதிர்வந்தாலும் அதனை உடைக்கும் ஆற்றல் பெருகும். உலகில் மகத்தான மாற்றங்கள் நிகழும். அழிவின் விளிம்பிலிருக்கும் உலகைக் காக்கும் உயர்ந்த எண்ணமும் இலட்சியமும் உருவாகும்.

மழைகாலத்தில்  காடுகளை நோக்கி வரும் பறவைகளைப் போல இராமல், மேகங்களைக் கிழித்துச் செல்லும் கழுகுகளைப் போல அது உங்களை வெற்றியின் மிகப்பெரிய சிகரத்துக்கு அழைத்துச்செல்லும்.

தொடரும்