முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கவும் அதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பின்னாலும் இருந்து செயற்பட்டவர் பஸில்.
ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதுடன் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை. இவர் ஏன் நாடாளுமன்றம் செல்லவில்லை என்ற சந்தேகம் பலராலும் எழுப்பப்பட்டது. காரணம் இவர் இட்டைப் பிரஜாவுரி மையைக் கொண்டவர் என்பதனாலேயே தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேசியப்பட்டியலில் உள்வாங்கப்படவோ இல்லை.
எவ்வாறாயினும் விரைவில் அவர் இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அவ்வாறாக இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யும் பட்சத்தில் சட்டச் சிக்கல்கள் எதுவுமின்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும்.
இவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் பட்சத்தில் முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.