தெரு ஓவியம், தினசரித் தன்மை (Every dayness), அடக்குமுறை எதிர்ப்பியங்கல் – பகுதி 3

505 Views

தெரு ஓவியமும் தினசரித் தன்மையும்

தெரு ஓவியங்களின் பல்வகைத்தன்மைதான் எல்லோரையும் கவர்வதற்கான காரணமாக அமைகின்றது. அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பையும், விடுதலையையும் மையப்படுத்தி வெளிவருகின்ற தெரு ஓவியங்கள், மக்களுடைய நாளாந்த வாழ்வியலை பிரதிபலிப்பதாக அமைகின்றது. Henri Lefebre (1987) ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட தினசரித்தன்மையை (Everydayness) மண்மயமாக்கி விளக்கமளிக்க முற்பட்டால், அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் தினசரித்தன்மை, முக்கோணச் சிக்கலுக்கூடு வெளிப்பட வேண்டிய அவசியமிருக்கின்றது.

அடக்குமுறை, அடக்குமுறை எதிர்ப்பு, அடக்குமுறை உள்வாங்கல். அடக்கு முறையையும், அடக்குமுறையை உள்வாங்கியவர்களையும் ஒரு வகையில் சேர்த்தாலும் எதிர்வினை இவ் இரண்டுக்கும் எதிராகவே நின்று கொண்டிருக்கும். ஆக அடிப்படையில் இரு துருவ சிக்கலுக்குள்ளானதாக அடக்குமுறைக்குட்பட்ட சமூகத்தின் தினசரித்தன்மை நிச்சயிக்கப்படுகின்றது.

ஒன்று அடக்குமுறையாளர்களினால் நிச்சயிக்கப்படுகின்ற தினசரித்தன்மை,

இரண்டாவது அடக்குமுறையை எதிர்ப்பவர்களினால் நிச்சயிக்கப்படுகின்ற தினசரித்தன்மை,

இரண்டினதும் தினசரித்தன்மையை நிச்சயிக்கின்ற காரணிகளும், எதிர்பார்க்கப்படுகின்ற விளைவுகளும் ஒன்றுக்கொன்று முரண் நிலையிலிருந்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இம் முரண்நிலையிலிருந்து தான் ஓவியம் வெளிவருகின்றது. இவ்வாறான ஒன்றுக்கொன்று முரணான அல்லது எதிர் நிலையிலிருந்து தான் ஓவியத்தின் Michael Sheringham (2006) குறிப்பிடுகின்ற ‘வினையாற்றும் திறன்’ வெளிப்படுகின்றது.

‘அடக்குமுறை’ உள்வாங்கப்படுவதில் வினையாற்றும் திறன் செயற்படுவதாக கூறப்படுவது அபத்தமாகத் தோன்றலாம். ஓவியத்தின் வினையாற்றும் திறனின் உச்சப்புள்ளி அடக்குமுறைக்கெதிரான ஓவியத்தில்தான் அடையப்படுகின்றது என்பது அபத்தமல்ல. பார்வையாளரினால் உள்வாங்கப்படும் வினையாற்றும் திறன் தெரு ஓவியத்தை சமூக இயக்கமாதலுக்கு இட்டுச் செல்லுகின்றது.

வடக்கு – கிழக்கு ஓவியவெளி அடக்குமுறையாளரின் (வெற்றியை) நியாயப்படுத்தலையும், அவர்கள் 2009இற்குப் பின் கொண்டாடும் வெற்றியை மையப்படுத்தியே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறையாளர் எவ்வாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்க்க முனைகின்றார்களோ- அப்பெரும்பான்மைச் சொல்லாடலின்- பிரதிபலிப்பாகவே ஓவிய வெளி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு-கிழக்கில் ‘தினசரித்தன்மை’ இராணுவமயமாக்கப்பட்ட சூழலில், பொது தெரு ஓவிய வெளி (சனநாயக) சுருங்கிப் போயுள்ளது அல்லது இல்லாமலே போயுள்ளது எனக் கூறலாம். இராணுவ மயமாக்கலுக்குள்ளிருந்து தான் பாரிய எதிர்ப்பு வெளிக்கிளம்ப முடியும், இராணுவ மயமாக்கலை உள்வாங்காது எதிர்ப்பதாயிருந்தால்.

இவ்வாறாக உள்ள நிலையில் பயத்தையும், அதனூடு சாவையும் கட்டமைத்து உருவாக்கப்படும் வெளியில் தினசரித்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய தெரு ஓவியங்கள் எழ முடியும் என்பதற்கு பல்வேறு நாடுகளை உதாரணமாக குறிப்பிடலாம். அவ் எழுச்சிக்காக மக்களின் கூட்டு உளவியலை வலுப்படுத்துகின்ற தன்மை தெரு ஓவியங்களுக்கு உண்டு என்பதற்கும் உதாரணங்கள் உண்டு.

தினசரி அடக்குமுறைத்தன்மையை மறைத்து மக்களை ஒரு மாயைக்குள் வைத்திருக்கின்ற உத்தி நீண்ட காலத்திற்கு நிலைக்கப்போவதில்லை. 2009இற்குப் பின்னரான அல்லது ஆயுதங்கள் மௌனித்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதியில் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக்குள் உள்வாங்கப்பட்ட வடக்கு – கிழக்கு பிரதேசங்களில், வாழ்வியலை, பணப்பெறுமதியை மையமாக வைத்து, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைத் தவிர்த்து, தனிநபர் வாழ்வியலையும் சுகபோகத்தையும், கூட்டு வாழ்வியலையும் விட்டு முன்வைக்கப்பட்ட வாழ்வியல் முறைமையில் வடக்கு – கிழக்கு பெரும்பாலுமே ஓர் சந்தைப்படுத்தலுக்கான வெளியாக மாற்றப்பட்டதுடன், மக்களும் நுகர்வோராக மாற்றப்பட்டார்கள்.

கூட்டு அடையாளம் சார்ந்து உரிமைகளுக்காய் குரல்கொடுத்த தியாகத்தன்மை ஐயப்படுத்தப்பட்டு, தேவையற்றதொன்றாக கட்டமைக்கப்பட்ட நிலையில், அடக்குமுறைத் தினசரித்தன்மையைப் பற்றிச் சிந்திக்க விடாது பணப்பெறுமதியை மட்டுமே மையமாகக் கொண்ட வாழ்வியல் முறையை தினசரித்தன்மையாக அறிமுகப்படுத்த முற்பட்டது பெரும்பான்மை அரசு. இவ்வுத்தி 2009இற்குப் பின்னர் மிகத் துல்லியமாக மக்களின் வாழ்வியலில் பிரதிபலித்தது.

மக்களின் கூட்டு அடையாள வாழ்வியல் விழுமியங்களிலிருந்து அவர்களைத் திசை திருப்பிய உத்தி, அவர்களின் உரிமைக்காக போராடும் உரிமையிலிருந்து அவர்களைத் திசை திருப்புவதாகும். அரசு முன்னெடுக்கும் கிளர்ச்சி எதிர்ப்பு அரசியல் உத்தியில் பணப்பெறுமதியை மையமாக வைத்து, தாராளவாத முதலாளித்துவத்தை (போட்டியை) முன்வைத்து ஊக்கமளிக்கின்ற வாழ்வியல் முறைமையில் பணம் உள்ளவர் கதாநாயகர்களாக உலவவிடப்படுகின்றார்.

பணம் வைத்திருக்கும் தன்மையை அதிகாரம் உள்ள தன்மையாகப் பிரதிபலித்து தலைமைத்துவத்திற்கு முன்னேறுகின்ற நிலைமை ஒரு செல்நெறியாக உருவாகி வருகின்றது. மேற்குறிப்பிட்ட தலைமைத்துவப் பாங்கு (பணம்-அதிகாரம் (செல்வாக்கு) – தலைமைத்துவம்) வடக்கு – கிழக்கில் மட்டுமல்ல பூகோள ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமையாக உருவெடுத்துள்ளது.

மிக அண்மையில் ‘நகரங்களை அழகுபடுத்துவோம்’ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் பொது வெளியில் தெரு ஓவியங்கள் வரையப்பட்டன. அவ்வோவியங்கள் பெரும்பாலுமே பெரும்பான்மை வாதத்தினதும், அது கொண்டிருக்கும் வரலாற்று அரசியல் சொல்லாடலதும் பிரதிபலிப்பாகவே இருந்தன.

சிறிலங்காவின் பன்முகத்தன்மையைத் தவிர்த்து ஒற்றைத்தன்மையை வலியுறுத்துவனவாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வடக்கு – கிழக்கில் வரையப்பட்ட தெரு ஓவியங்கள் தமிழர் பிரதேசத்தின் அடக்குமுறைத் தினசரித்தன்மையை பிரதிபலித்ததாக தெரியவில்லை. பல்வேறு காரணங்கள் அவ்வாறானதொரு செயற்றிட்டத்திற்கு ஊக்கிகளாக அமையாதிருக்கலாம்.

2009ன் பின்னர் வடக்கு – கிழக்கு ‘சுய தணிக்கையை’ தினசரித்தன்மையில் உள்வாங்கிக் கொண்டது. தணிக்கை புறத்திலிருந்து வந்த போதிலும், யதார்த்தத்தை தமிழர் தரப்பிலிருந்து ஆய்விற்குட்படுத்தியவர்கள், உரிமைசார் தெளிவுரைகளை முன்னிறுத்தியவர்கள் எதிர்கொண்ட விளைவுகளால் தினசரித்தன்மையில் சுய தணிக்கை ஒரு கூறாக உள்வாங்கப்பட்டது. அதனுடைய எதிரொலியாகவே வடக்கு – கிழக்கில் எழுந்த தெரு ஓவியங்களையும் நோக்க வேண்டியுள்ளது.

தினசரி அடக்குமுறை அனுபவங்களை நாசூக்காக பிரதிபலிக்கக் கூடிய செல்நெறியின் அவசியம் உணரப்படுகின்றது. தமிழ்த்தேசிய நலன்கள் சார்ந்தும், அடையாளக் கட்டமைப்புச் சார்ந்தும் தெரு ஓவியங்கள் வரையப்பட வேண்டிய காலமிது. முல்லைத்தீவில் நடந்த மகாவலி அபிவிருத்திச் சபையின் நில அபகரிப்பிற்கெதிரான போராட்டத்தில், ஒரு பெண்மணி கூறிய வரிகள் மிக யதார்த்தமானவை. அடக்குமுறைத் தினசரித்தன்மையை துல்லியமாக வெளிக்கொணர்பவை.

“2011ஆம் ஆண்டுக்குப் பின் மீள் குடியேற்றப்பட்ட நாங்கள் எங்களுடைய சொந்த வயல்களில் கூலிகளாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்”. இந்த யதார்த்தம் கலைவடிவில், குறிப்பாக ஓவியத்திற்கு மொழி மாற்றம் செய்யப்படுமானால் அடக்குமுறைத் தினசரித்தன்மை வெளிப்படுத்தப்படும். அதுவே அடக்குமுறைக்கெதிரான ஆயுதமாகவும் மாற்றப்படலாம்.

தெரு ஓவியமும் அடக்குமுறை எதிர்ப்பியங்கலும்

பேச்சுரிமையற்ற, கருத்துச் சுதந்திரமற்ற சனநாயக வெளியில் தெரு ஓவிய அரசியற் செயற்பாட்டாளனுக்கு அல்லது செயற்பாட்டாளர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் அடக்குமுறை எதிர்ப்பியங்கலை தெரு ஓவியத்தினூடு பிரதிபலிப்பது அல்லது வெளிப்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழாமலில்லை.

அடக்குமுறைத் தினசரித்தன்மையை பதிவு செய்தலும் எதிர்ப்பியங்கலின் ஒரு வடிவமே. அடக்கு முறை எதிர்ப்பியங்கலை பண்பியல் அல்லது அருவ ஓவியத்தினூடு பிரதிபலித்தால் ஓவியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து இயங்கக்கூடிய தன்மை இருக்கும்.

அடக்குமுறை வரையறைக்குள் ‘அடங்கமறுத்தலும்’ எதிர்ப்பை வெளிப்படுத்தலே. 2011இல் தஹ்றிர் (Tahrir) சதுக்கத்தில் நிகழ்ந்து எகிப்திய புரட்சியில் அப்போதைய அதிபரான முபாரக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும், அவருடைய 30 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததிலும் தெரு ஓவியங்களினதும் பங்கு கணிசமானது (S.H.Awad 2017). அடக்குமுறை எதிர்ப்பியக்கத்தில் தெரு ஓவிய காட்சியமைவில், தந்திரோபாய காட்சி முறைமை, எதிர்பார்க்கின்ற அரசியல் செயற்றிட்டத்தை வீரியமாக்க வலுச்சேர்க்கின்றது (Ibid). ஓவியக் காட்சிவெளிக்கும், படிமத்திற்குமான உறவு ஒன்றையொன்று சார்ந்து நிற்பது(Augustin 2017).

எகிப்திய தெருஓவியச் செயற்பாட்டளராக பிரபலமாக அறியப்பட்ட Omar Fathy உடைய சுவரோவியத்தில் குறிப்பிடப்படும் வாசகங்கள் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கின்றன.

“எழுதுகோலுக்கும், ஓவியத்தூரிகைக்கும் அச்சமடைகின்ற ஆட்சி,

பாதிக்கப்பட்டவர்களை தாக்குகின்ற அநீதியான கட்டமைப்பு,

 நீங்கள் நியாயமானவர்களாய் இருந்திருந்தால் நான் வளர்வதையிட்டு அச்சமடையத் தேவையில்லை.

நீங்கள் செய்வதெல்லாம் சுவர்களுடன் சண்டையிடுவதே, ஓவியத்தின் மீது உங்களது அதிகாரத்தைக் காண்பிக்கின்றீர்கள்.

ஆனால் உங்களுடைய அகத்தில் கோழைகளாய் உள்ளீர்கள்,

நீங்கள் அழிக்கப்பட்டது எதையும் மீளக் கட்டவில்லை”.

 மேற்கூறப்பட்ட வார்த்தைகள் ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படைக் கட்டுமானத்தை கேள்வி கேட்பதாக எழுதப்பட்டது.

மேற்குறிப்பிட்ட தெரு ஓவியம் பல முறை வரையப்பட்டதும், தொடர்ந்து தற்கால அரசியலுக்கேற்ற முறையில், அதிகார சிக்கலைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்தும் மாற்றத்திற்குள்ளாகி வருகின்றது (S.H.Awad 2017). Holly Eva Ryan (2013) தன்னுடைய முனைவர்பட்ட ஆய்வில் பிரேசில், ஆர்ஜென்டீனா, பொலிவியா நாடுகளில் உள்ள தெரு ஓவியங்களை குறிப்பாக தெரு ஓவியங்களின் பங்களிப்பு பற்றிய பகுதிகளில், அடக்குமுறைக்கெதிராக தெரு ஓவியர்கள் அடக்குமுறைக்கு எதிரான ஓவியங்களை மையப்படுத்தி, இயக்கமாக்கி, குழுக்களானார்கள் என்பதற்கு உதாரணமாக Circulo 70ஐ குறிப்பிடலாம்.

அடக்குமுறைச் சொல்லாடலுக்கு அல்லது மேலாண்மைச் சொல்லாடலுக்கு மாற்றீடான சொல்லாடலை தங்களது ஓவியங்கள் மூலம் கட்டமைத்தார்கள் (Ibid). Circulo 70 குழுமம் பெரும்பாலும் இளைய தலைமுறை தெரு ஓவியர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய இலக்குகளில் ஒன்றாக, பார்வையாளர்களுக்கு தொடர்ந்தும் மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க தூண்டுவதாகவும் அதே வேளை ‘சமூக மாற்றம்’ ஒரு யதார்த்தம் எனும் நம்பிக்கையைத் தொடர்ந்து கொடுப்பதாகவும் அமைந்திருந்தது.

தெரு ஓவியங்கள் ஏற்படுத்துகின்ற விளைவுகள், (தனி நபரிலும், கூட்டுக் குழுமத்திலும்), -தேடலும் தெரிதலும்- அது ஏற்படுத்தும் உணர்வுகளும் அரசியலே (Ahmed 2014). கலாச்சார எதிர்ப்பியங்கியலின் அடிநாதமாக விளங்குவது உணர்வுகளே (Horhager 2017). தெரு ஓவியங்கள் என்ன என்பதற்குப் பதிலாக அவை என்ன செய்கின்றன என்ற கேள்வியை Ahmed (2014) எழுப்ப விரும்புகின்றார். இவ்வாறு எழுப்பப்படும் உணர்வுகள் மீயுயர் தேசியத் தளத்தில் ஆராயப்பட வேண்டும்.

‘நாட்டிற்கான பற்று உணரப்படுதல் என்பது, பற்று என்பது இங்கே மூலதனமாக இருக்கின்றது, அது மீளவும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும், மற்றவர்களாலும் தீங்கிழைக்கப்பட்டதை அல்லது அநீதி செய்யப்பட்டதை உணர்தலாகும், எப்போதெனில் எனக்கானதை மற்றவர்கள் வலிந்தெடுக்கும் போது ‘‘To feel love for this nation,

whereby love is an investment that should be returned, is also to feel injured by those others, who are

‘taking’ what is yours (Ahmed 2014). 2014). Fuery (2003) ஐப் பொறுத்தவரை காட்சியியல் கலாச்சாரமும் Visual culture), திறனாய்வுக் கோட்பாடும் (Critical theory) ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது. காட்சியியல் கலாச்சாரமும், கலாச்சாரப் படைப்பும், கற்பித்தலுக்குரிய உத்தியாக, (குறிப்பாக ஓவிய பார்வையாளர்கள் தொடர்பில்), விழிப்புணர்வு, விளங்குதல், செயற்படுதல் போன்றன சமூக – அரசியல் தளத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் (Horhager 2019).

இஸ்ரேலிய காலனித்துவ அடக்குமுறைக்கெதிராக காசா பெருஞ்சுவர் ஒரு போராட்டக் களமாகவே உருவாக்கப்பட்டு விட்டது. பலஸ்தீனியர்களுக்கு தெரு ஓவியம் அவர்களுடைய தேசத்திற்கான வேர்களைத் தேடுகின்ற உத்தியாகவும் அதே நேரத்தில் சர்வதேசத்தை நோக்கி அவர்களது அடக்குமுறை தொடர்பில் நியாயப் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது (Ibid).‘அவர்களுடைய ஆட்டிலறிப் பீரங்கிகள் எங்களுடைய வேர்களைக் கொல்ல முடியாது (Their Artillery Can’t Kill Our Roots)’ ‘இருப்பது எதிர்ப்பதற்காக’(To Exist is to Resist) போன்ற வாசகங்கள் பலஸ்தீனியத் தன்மையை தக்கவைத்துக் கொள்ள உதவி செய்கின்றன.

வடக்கு – கிழக்கிலும் ‘ஈழத்தமிழ்த்தன்மையை’(Eelam Tamilness) தக்க வைத்துக் கொள்ளவும் ஆழப்படுத்தவும், அடக்குமுறை எதிர்ப்பியங்கலுக்கும் தெரு ஓவியங்களின் அவசியம் உணரப்படுகின்றது. ஈழத்தமிழ்த்தன்மையைப் பிரதிபலிக்கக்கூடிய, எதிரொலிக்கக்கூடிய தெரு ஓவியங்கள் ஏற்கனவே கூறப்பட்ட அடக்குமுறைத் தினசரித்தன்மையை பிரதிபலிப்பதோடு தமிழ்த்தேசக் கட்டுமானக் கட்டமைப்பிற்கு பங்களிப்புச் செய்வது காலத்தின் கட்டாயமாக உணரப்படுகின்றது.

ஈழத் தமிழ்த் தன்மை தான் வடக்கு – கிழக்கு, புலம்பெயர் மக்களின் ஏன் மலையக மக்களின் பொதுக் குவிமையமும் கூட. அந்தப் பொதுக் குவிமையத்தின் இயங்குதன்மையை கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றால், தெரு ஓவியங்கள் மீள எழுச்சி பெற உதவுவதன் மூலமும் சமூக இயக்கமாக அவற்றை அணி திரட்டுவதன் மூலமுமே தான் எதிர்ப்பியங்கலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.

 -எழில்-

Leave a Reply