தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் – புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு

159 Views

“இலங்கையின் தேசிய பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மலர்ந்துள்ள 2021ஆம் ஆண்டானது நாட்டு மக்களுக்குச் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய வேண்டும். இவ்வருடமானது எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழவேண்டும்.

இந்தப் புதிய ஆண்டிலாவது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதில் முன்வைக்கப்படும் தீர்வானது நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமையவேண்டும்.

அதேவேளை, மாகாணங்களுக்கு நேர்மையான ஓர் அதிகாரப் பகிர்வையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு. எமது இந்தப் பரிந்துரைகளை புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளம்மிக்கதும், நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஓர் இலங்கைத் தீவை உருவாக்குவதே எமது கடமையாகும்.

எனவே, இந்தப் புத்தாண்டு நாளில் இந்தத் தலையாய கருமத்தை நிறைவேற்ற இன, மத, கட்சி வேறுபாடின்றி உழைக்க முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றுள்ளது.

Leave a Reply