தீபாவளியை வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுங்கள்! மதத் தலைவர்கள் அறிவிப்பு

184 Views

கொடிய கொரோனாநோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று மாலை யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அது மட்டுமன்றி இந்துக்களின் விரதநாட்கள் வருகின்றன. எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்றுகூடல்களை தவிர்த்து அமைதியாக இறைவனை பிரார்திக்க வேண்டும். அமைதியான கொண்டாட்டங்கள் கூட சமூக இடைவெளி முக கவசம் அணிதல் போன்றவற்றை பேணி தீபாவளியை கொண்டாடுங்கள்.

அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். அதோடு தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள். மேலும் சுகாதார துறை, மருத்துவதுறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார்கள்.

இச் சந்திப்பில் நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply