கன்னியா வெந்நீரூற்று புராதன விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் செயற்பாட்டிற்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆண்டாண்டு காலமாக ஆட்சிகள் பல மாறினாலும் இந்நாட்டில் வாழும் இந்துக்கள் மீதான மதரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இந்த வகையில் அடக்கு முறைகளும், துன்புறுத்தல்களும் அதர்மமான செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.
2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்கி, சமாதான சகவாழ்வை மலர்விக்கும் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு இருந்தது.
ஆனால் அரசோ, அரச நிறுவனங்களோ இதற்கு மாறாகவே செயற்படுகின்றது. அது தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாமற் செய்துள்ளது.
இந்து மதச் சின்னங்கள் பல எமது தமிழர்கள் பிரதேசத்தில் காணப்படுவது முந்தய காலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. இருந்தும் இவற்றை பௌத்த மத சின்னமாக மாற்றி திரிபுபடுத்துவதில் தொல்லியல் திணைக்களம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
திருகோணமலை சிவன் ஆலயம் மட்டுமல்ல, வடக்கிலுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம், செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் போன்ற தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்க தொல்லியல் திணைக்களம் முயன்று வருகின்றது.
இதற்கமைவாக கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய திருத்த வேலைகளுக்கு தடை போடுவதோடு, ஆலயத்தின் அருகில் உள்ள வில்கம் விகாராதிபதி தலைமையில் அங்கு விகாரை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.