திருகோணமலை, மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலகத்தில் 25கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப் பட்டுள்ளதுடன் மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 15பேரும் மட்டக்களப்பு சுகாதார பிரிவினை சேர்ந்த 06பேரும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்தி அதிகாரி பிரிவுகளில் தலா இருவருமாக 25பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒன்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இரண்டுமாக மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1426 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 19கொரோனா மரணங்களும் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 171 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மாதம் 165பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். கடந்த வருடத்தில் 200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்” என்றார்.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள் கோவிட்19 காரணமாக பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.