தாய்லாந்து போராட்டக்கார்களிடையே கலவரம்- பலர் படுகாயம்

475 Views

தாய்லாந்து நாடாளுமன்றத்தின் வெளியே ஜனநாயக சார்பு போராட்டக்காரர்களுக்கும் அரசு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும், 6 பேர்  காயப்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் முதல் தாய்லாந்து அரசுக்கு எதிராக ஜனநாயக சார்பு இயக்கங்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் தாய்லாந்து வீதிகளில் தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மாணவர்கள் பெரிதும் கலந்துகொண்டுள்ளனர்.

 1)பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டும்.

2)அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து அதை மேலும் ஜனநாயகமாக மாற்ற வேண்டும்.

3)மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற மூன்று முக்கியக் கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்த போராட்டங்கள் தொடர்கின்றன.

2014-ல் இராணுவத் தலைவராக இருந்த பிரயுத் ஆட்சி கவிழ்ப்பு செய்து, நியாயமற்ற முறையில் ஆட்சியில் அமர்ந்ததாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் இராணுவ சார்பு கட்சிக்கு ஆதரவாகச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இராணுவ ஆட்சியின் கீழ் எழுதப்பட்ட மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்பு ஜனநாயக விரோதமானது என்றும்  போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

“போராட்டங்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி அனைத்துத் தரப்பினரின் குறைகளையும் ஆய்வு செய்து நாடாளுமன்ற செயல்முறை மூலம் இந்த வேறுபாடுகளை விவாதித்துத் தீர்ப்பதுதான்” என்று தாய்லாந்து பிரதமர் முன்னதாக கூறியிருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட ஆறு அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் அத்தகைய திட்டங்களை மேலும் பரிசீலிக்க ஒரு குழு  அமைத்துள்ளதாக  போராட்டக்காரர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

இதுவரை முடியாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டமும் நடந்தது இல்லை என்றும், அரசு நிறுவனம் மிகவும் புனிதமானது என்றும் முடியாட்சியின் ஆதரவாளர்கள் போராட்டங்களைக் கடுமையாகக் கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (17/11/20) அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கோரி தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை வந்தடையும் முன்பே அரசு தரப்பு ஆதரவாளர்கள்  நாடாளுமன்றத்தில் கூடி அரசியலமைப்பில் எந்த மாற்றமும் கொண்டு வரக் கூடாது என்று அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள், முடியாட்சியைக் குறிக்கும் மஞ்சள் உடையில் வந்துள்ளனர்.

“போராட்டக்காரர்களும் அரசு தரப்பு ஆதரவாளர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதாகவும், பின்னர் 15 நிமிடங்களுக்கு மேல் இருதரப்பிற்கும் சண்டை நடந்ததாகவும்”  தெரிவிக்கப்டுகின்றது.

இரு தரப்பிற்கும் எதிரான மோதலைக் கட்டுக்குள் கொண்டு வர, தண்ணீர் பீரங்கிகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

இந்தக் கலவரத்தில் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் குண்டடிபட்டுள்ளதாகவும் பாங்காகின் எராவன் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது.

“போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைத் தாய்லாந்து நாடாளுமன்றம் புறக்கணித்து விடும். குறிப்பாக முடியாட்சிக்கு எதிரான கோரிக்கைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.” என சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கலவரத்திற்குப் பிறகு, “நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்; போராட்டங்களை மேலும் அதிகரிக்கப் போகிறோம்” என்று ஜனநாயக சார்பு இயக்கங்களின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி -அல் ஜசீரா 

Leave a Reply