தாய்லாந்தில் அரசிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

400 Views

தாய்லாந்து அரசிற்கு எதிராக வலுவடைந்து வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகர் பாங்கொக்கில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசர நிலையை அரசு நீக்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக தாய்லாந்து அரசிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். பிரதமர் பிரயுத் சான் – ஒச்சா பதவி விலக வேண்டும். அரசமைப்புச் சட்டத்திலும், மன்னராட்சி முறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த, தலைநகர் பாங்கொக்கில் கடந்த வாரம் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இருந்தும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தங்கள் போராட்டத்தை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றார்கள். போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, மற்றும் தண்ணீர் விசிறி கலைக்க முயன்றனர். இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் அவசர நிலையைப் பொருட்படுத்தாது அரசு மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர். அத்துடன் அவசர நிலையை மீளப் பெறக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து, மாணவர்களின் எதிர்ப்பின் காரணமாக அவசர நிலை தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. எனினும் பிரதமர் பதவியிலிருந்து பிரயுத் சான் – ஒச்சா மூன்று நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் நடைபெறும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply