தமிழ் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரவேண்டியதன் அவசியத்தினை முல்லைத்தீவு நீரடிப்பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காட்டி நிற்பதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர்
இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பெரும்பான்மையின கட்சிகள் ஒருபோதும் சிறுபான்மை சமூகத்தினை அரவணைக்காது. எமக்கான உரிமையினை நாங்கள் ஒன்றாக இருப்பதன் மூலமே பெற்றுக்கொள்ளமுடியும்.
அதன்காரணமாகவே பெரும்பான்மை கட்சியில் இருந்து நான் வெளியேறி இன்று இலங்கை தமிழரசுக்கட்சியுடன் செயற்பட்டுவருகின்றேன்.இந்த நாட்டில் அனேகமான பௌத்த பிக்குகள் பல்வேறு காலப்பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
அதன்காரணமாகவே இங்கு சிலர் பௌத்த பிக்குகளை அழைத்து போராட்டங்களை நடாத்தியபோது ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பௌத்த பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக மாறும் நிலையேற்படும் என தெரிவித்திருந்தேன்.
அவர்கள் எங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமது பெரும்பான்மையின் பலத்தினை நிரூபிக்கும் செயற்பாடுகளை கடந்த காலத்தில் மேற்கொண்டு வந்தனர்.
இன்று வடக்கிலும் தங்களது அராஜகங்களை அரங்கேற்றி தமது பலத்தினை நிரூபிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அண்மையில் மலையகத்தில் ஒரு தோட்டத்தொழிலாளியின் சடலத்தினை நீதிமன்ற கட்டளையினை மீறி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புதைததற்காக அவரை கைது செய்து கூண்டில் அடைத்த இந்த சட்டம் முல்லைதீவில் நீதிமன்ற கட்டளையினை மீறிய செயற்பாடுகளுக்கு
எந்தவித நடவடிக்கையும் எடுக்காமை இந்த நாட்டில் நீதித்துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீரடிப்பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குமார்களின் செயற்பாடுகள் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து ஒன்றுசேரவேண்டிய சந்தர்ப்பாக நான் இக்காலத்தினை கருதுகின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பலத்தினை இந்த நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கவேண்டும்.அண்மையில் முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களுக்குள் இருந்தவேற்றுமைகளை ஒன்று சேர்ந்தது போன்று தமிழர்களும் தமது பலத்தினை வெளிப்படுத்தவேண்டும்.
அதேபோன்று தேசிய கட்சிகளில் இன்று அமைப்பாளர்கள் உட்பட பல்வேறு பதவி நிலைகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் அதில் இருந்து விலகி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முன்செல்ல முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.