பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
மனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி சமூகத்தினர் நீண்டகாலமாக சம்பள நிலுவைகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்படாமல் இருக்கின்றனர். கல்வி நடவடிக்கைகளுக்கென 2008ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலே 3,000 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டும் கூட, அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லை என்பதுடன் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்று இன்று வரையும் தெரியவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை அவர்களுக்கு பதவி உயர்வுகள், சம்பள நிலுவைகள் உட்பட எந்தவிதமான தீர்வு கிடைக்கவில்லை.இவர்கள் கடந்த 24 வருடங்களாக பதவி உயர்வு சம்பள நிலுவகைள் ஏனைய அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டிலே மனிதவள அபிவிருத்திதான் உண்மையில் ஒரு நிலையான அபிவிருத்தியாக இருக்கும். அப்படிப்பட்ட மனிதவள அபிவிருத்தியை அர்ப்பணிப்போடு செய்துகொண்டிருக்கின்ற அதிபர், ஆசிரியர்களுடைய பதவியுயர்வுகள், சம்பள உயர்வுகள், சம்பள நிலுவைகள் எதையும் இந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அவர்கள் மீண்டும் நாடுதழுவிய ரீதியிலே பாரிய தொழிற்சங்கப் போராட்டமொன்றைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள். இந்த நாட்டிலே வைத்தியர் சங்கம், ஆசிரியர் சங்கம், அதிபர் சங்கம் போன்ற பல்வேறுபட்ட தொழிற்சங்கத்தினர் தங்களுடைய உரிமைக்காகவும், பதவியுயர்வுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும், நீதி வேண்டித் தொடர்ந்து போராட வேண்டிய ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரச துறையில் பதவியுயர்வுகள் அல்லது சம்பள உயர்வுகள் தொடர்பாகவும்இ அதேபோல் தனியார் துறையிலும் முறையான ஒரு கொள்கைத் திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்காக முறையான ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த நிலைமைகள் இல்லாதவரைக்கும் இந்த நாட்டிலே தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்க முடியாததொன்றாக இருக்கும்.
இந்த நாட்டினுடைய தேசிய வருமானதின் முதுகெலும்பாக இருந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு தொடர்பாக நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் படி 50 ரூபாய் மேலதிகச் சம்பளத்தை பெறுவதற்கு தோட்டதொழிலாளர்கள்; தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தியும் இதுவரை அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொகை வழங்கப்படவில்லை.
அரசாங்கம் இந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தை 50 ரூபாயினால் அதிகரித்துக் கொடுப்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையிலே, இப்போதைய நிலையில் 50 ரூபாய் என்பது மிகவும் சொற்ப தொகையாகும். மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியிலே நாட்டின் தேசிய வருமானத்திற்கு முதுகெலும்பாக உழைத்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தொழிலாளர்களின் விடயத்தில் அரசாங்கம் எந்தவிதமான கவனமும் செலுத்தமால் அவர்களைப் புறக்கணிப்பதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே, சம்பளத் திருத்தச் சட்டமூலத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை அதிகரித்து கொடுப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்களும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்ததிலே குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுடைய பங்களிப்பு பெரியளவிலானதாக இருந்தது. வடக்கு மாகாணத்திலே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதாரண சிற்றூழியர் நியமனங்களுக்குக்கூட வடக்கு மாகாணம் தவிர்ந்த பிற மாவட்டங்களில் இருக்கின்றவர்கள் நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் ரீதியான உள்நோக்கத்தோடு அந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அரசாங்கம் இத்தகைய நியமனங்களை வழங்கும்போது அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற கல்வி கற்ற இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வட மாகாணத்திலே, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்ற ஆயிரக் கணக்கான இளைஞர்கள் யுவதிகள் இன்று வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், வடக்கு மாகாணத்திலுள்ள பல்வேறுபட்ட திணைக்களங்களுக்கு, சுகாதாரத் துறையாக இருக்கலாம், கல்வித்துறையாக இருக்கலாம், மின்சார சபையாக இருக்கலாம் – சாதாரண சிற்றூழியர் நியமனம்கூட வேறு மாகாணங்களிலுள்ளவர்களை அரசியல்
செல்வாக்கோடு நியமனம் செய்கிறார்கள். அபிவிருத்தி நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது அரச நியமனங்களாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அரசாங்கம் அது தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டும்.
வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இருக்கின்ற தமிழ் மக்களுடைய வாக்குகள் உங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் அல்லது ஏனைய தேர்தல்களாக இருக்கலாம், அவர்களுடைய வாக்குகள் உங்களுக்கு மிக முக்கியமாக இருக்கின்றது. ஆனால், அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்ற நீங்கள், அவர்களுடைய பொருளாதார ரீதியான அபிவிருத்தியிலோ அல்லது வேலைவாய்ப்பிலோ அல்லது நிரந்தரமான தொழில் முயற்சியை மேற்கொள்வதிலோ எந்தவிதமான அக்கறையையும் செலுத்துகின்றீர்கள் இல்லை.
மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்றது. 4 வருடங்களுக்கு முன்பாக இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கிய மக்கள் உங்களை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் கொண்டுவந்தார்கள். இருந்தபோதிலும் இந்த 4 வருட காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் குறைந்தபட்சம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தொழிற்சாலைகளைப் புனரமைப்பதற்குக்கூட உங்களால் முடியவில்லை அல்லது புதிய தொழிற்சாலைகளை அமைக்க முடியவில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் இன்று வேலையில்லாத நிலையிலிருக்கிறார்கள். பட்டதாரிகளுக்குக்கூட நியமனம் வழங்க முடியவில்லை; தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க முடியவில்லை. தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்ட இந்த அரசாங்கம் இந்த 4 வருட காலமாக வடக்கு கிழக்கில் எந்தவிதமான அபிவிருத்தியையும் செய்யவில்லை.
ஜனாதிபதி வேட்பாளராக உள்ளவர்களும் சரி , அமைச்சர்களாக இருக்கின்றவர்களும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் வடக்கு நோக்கி வந்து ஒவ்வொருவிதமாக கதையைச் சொல்கின்றார்கள். சஜித் பிரேமதாஸ அவர்கள், ‘நான் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினையை 6 மாத காலத்திற்குள்ளே தீர்ப்பேன்’ என்று கூறுகிறார். அவருடைய கட்சியின் தலைவரான பிரதம மந்திரி அவர்கள், தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 3 வருடகால அவகாசம் தாருங்கள் என்று சொல்கின்றார்.
நீங்கள் வடக்கை நோக்கிவந்து தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக ஒவ்வொருவிதமான கதையைச் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். குறைந்தபட்சம், யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே சிதைவடைந்திருக்கின்ற தொழிற்சாலைகளைப் பொருளாதார ரீதியாக நன்மைபெறும் வகையில் புனரமையுங்கள்! புதிய தொழிற்சாலைகளை உருவாக்குங்கள்! வேலை வாய்ப்புக்களை வழங்கும் போது அந்த மாகாணத்திலிருக்கின்றவர்களுக்கு அந்த வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, நீங்கள் அந்த மக்களது வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கின்றீர்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே நியமனங்களைப் பெற்றிருப்பவர்கள்
எங்கேயிருந்து வந்திருக்கின்றார்கள்? என்று பாருங்கள்! அதாவது, யாழ்.
பல்கலைக்கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு
வெளிமாவட்டத்திலிருந்து நபர்களைக் கொண்டுவந்து நியமனம்
வழங்குகின்றார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக
இருந்தும்கூட உங்களால் இதனைத் தடுக்க முடியவில்லை.இப்போது எல்லா
விடயங்களும் முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே, இந்த அரசாங்கம் தனக்கு வாக்களித்த மக்கள் விடயத்தில் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.