தமிழ் திரையுலகில் புதுமை பொய்யாவிளக்கு!- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ … உயிர்காக்கும் கடவுளென மருத்துவர்களைப்  பலரும் மதிப்பதுண்டு. அன்று முள்ளிவாய்க்காலில் இருந்த அனைவரும் டொக்டர் வரதராஜா அவர்களை அசல் கடவுளாகவே பார்த்திருப்பார்கள், இப்போது பொய்யா விளக்குப் படத்தைப் பார்ப்பவர்களும் அதையேதான் நிச்சயமாகச் சொல்வார்கள்.

இவ்வளவு காலமும் செய்ததுபோதும் இனி விட்டிட்டு வாங்கோ, போவம் என கணவன் ஒருவரிடம் மன்றாடும் சாதாரமான ஒரு பெண்ணாக அவரின் மனைவி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அவரைக் கேட்கிறார், ஆனால், குடும்பத்தின் மேலான விசுவாசத்தை மேவி, தொழிலுக்கு விசுவாசமாக அவர் இருந்தமாதிரி எங்களில் எத்தனை பேரால் இருக்கமுடியும் என்பது மனதை மிகவும் தொட்டது. டொக்டர் வரதராஜாவிடம் இருந்த மனிதாபிமானம், மேன்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் அன்று அங்கு கடமைபுரிந்த அத்தனை மருத்துவர்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

Comduit அமைப்பின் நிகழ்வொன்றின்போது, போர் காலத்தின்போது அவரின் வாழ்க்கை பற்றி டொக்டர் வரதராஜா அவர்கள் பேசியதை நான் நேரில் கேட்டிருந்தேன். அதனாலும், போர் பற்றிய ஏனைய சில கதைகளை அறிந்திருந்ததாலும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டவை எனக்குப் புதிதாக இருக்காவிட்டாலும்கூட, காட்சிப்படுத்தலின் தாக்கம் மனதில் அதிகம் பாதிப்புக்களை உருவாக்கும் என்பதை என்னால் நன்கு உணரமுடிந்தது.

மருத்துவர்களும் சாதாரண மனிதர்களே என்பதையும் மருத்துவத்தை முறையாகச் செய்யமுடியாதபோது மருத்துவராக ஒருவர் உணரும் வலி எத்தகையது என்பதையும் டொக்டர் வரதராஜா அவர்கள் மிக அருமையாகக் காட்டியிருக்கிறார். இத்தனை உணர்வுகளையும் இன்னொருவரால் கொண்டுவந்திருக்க முடியுமா என வியக்குமளவுக்கு  ஒரு தந்தையாக, ஒரு மருத்துவராக, ஒரு நோயாளியாக, ஒரு கைதியாக  அவரின் நடிப்பு மிக இயல்பாகவும், சிறப்பாகவும் இருந்தது.

நடந்துமுடிந்தவற்றின் வலிகளையும் அதன் பாதிப்புக்களையும் மறக்கமுடியாமல் செல் அடிப்பது பற்றி மகள் கனவில் கதைப்பதும், டொக்டர் கனவு கண்டு விழித்தெழுவதும், பின்னர் கவுன்சலிங் செல்வதுமென போர் ஒன்றின் மனப்பாதிப்புக்களையும் பொய்யா விளக்கு சிறப்பாகச் சொன்னது.

‘என் ஒளியைத் திருடாதே’ என்ற வாசகம் டொக்டர் இருந்த சிறையின் சுவரில் எழுதப்பட்டிருக்கும். அந்த ஒளியைப் பாய்ச்சும் நிலையை மீளவும் அவர் அடைந்து பொய்யா விளக்காக ஆனதை படத்தின் தலையங்கம் மூலம் ஒரு குறியீடாக இயக்குநர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக அமைந்திருந்த பாடசாலை ஒன்றின் வகுப்பறைக் கரும்பலகையில் ‘அறம் செய்ய விரும்பு’ என எழுதப்பட்டிருக்கும். இது அறம் செய்வதையும், செய்யாமையையும் காட்டிநின்றது.

அரசாங்கம் நம்பியதுபோல போராளிகளுக்கும் அவர் சிகிச்சை செய்திருப்பார், போராளிகளின் ஆதரவாளராகவும் அவர் இருந்திருக்கலாம். எவராக இருந்தாலும் அவரைக் காப்பாற்றுவதுதானே ஒரு மருத்துவரின் கடமை, அதைவிட அவர் அந்த இடத்தையோ அவரின் கடமையோ விட்டு வெளியேறவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமான விடயமெனலாம். அவரது உயிரைப் பற்றியும் அக்கறைப்படாமல் அப்படிப்பட்ட மேன்மையானதொரு தொழிலைச் செய்த அந்த மனிதர் ஒரு கட்டத்தில் அவரது தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது அவருக்குத் தண்ணீர் கொடுக்காமல் தனது தண்ணீர் போத்தலுடன் செல்லும் தமிழ் மகன் ஒருவரைப் படத்தில் காட்டியதும் பல செய்திகளைச் சொல்லாமல் சொன்னது.76638428 982701865415221 9084302468984078336 o58 1 தமிழ் திரையுலகில் புதுமை பொய்யாவிளக்கு!- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

அவ்வாறே ஒரு அரசாங்க மருத்துவர் காயமடைந்திருந்தபோது சிகிச்சை மறுக்கப்படுவதும், அவர் துன்புறுத்தப்படுவதும், மற்றையோருக்கு அரசாங்கம் எதைச் செய்திருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை என்பதையும் இது  சொல்லாமல் சொன்னது.  காயத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளின் தாக்கத்தை அறிந்துகொண்டும், சிகிச்சையில்லாமல் வலியில் உழன்ற டொக்டர் வரதராஜாவின் மனநிலை எப்படியிருந்திருக்குமென்பதை எங்களால் கற்பனைசெய்து மட்டும்தான் பார்க்கமுடியும்.

இந்தப் படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தாலும்கூட, காட்டப்பட்டிருந்த அத்தனை சம்பவங்களும், சம்பாஷணைகளும் எவ்வளவுதூரம் உண்மையெனத் தெரியவில்லை. படமெனப் பார்க்கும்போது, மேலதிக மருந்து தேவையெனக் கேட்டு சுகாதார அதிகாரிக்கு எழுதும்போது, மதுக் கோப்பைகளுடன் நீங்கள் உல்லாசமாக இருப்பீர்கள், இங்கு மக்கள் படும் துன்பம் உங்களுக்கென்ன தெரியும் என்ற தொனியில் டொக்டர் வரதராஜா அவர்கள் எழுதுவதாகக் காட்டப்படுகிறது.

அப்படிக் குற்றம்சொல்லாமல் தேவையைக் கேட்டு எழுதியிருக்கலாம்/காட்டியிருக்கலாம் என என்னை அது எண்ணவைத்தது. அதேபோல படம் நிறைவுறும்போது, மக்கள் எவருமே கொல்லப்படவில்லையெனச் சூழ்நிலையின் பாதிப்பால் ஊடகங்களுக்குச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் கூறிய அவரின் பேட்டி பேப்பரில் வெளியாகியிருந்ததைப் பார்த்து மனம் குமுறும் டொக்டரிடம், நான் சொல்லும்போதே அங்கிருந்து வெளிக்கிட்டிருந்தால் உது ஒன்றும் நடந்திராதென மனைவி சொல்வது போலக் காட்டியதும் என் பார்வையில் நன்றாகவிருக்கவில்லை.

அத்தனையும் நடந்தமைக்கான வருத்தத்தைக் காட்டி இப்படியாவது தப்பிவிட்டோமே எனச் சொல்லியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். மற்றது, மனைவியும் நண்பரும் நடந்ததை நினைக்காதே, மறந்துவிடு எனச் சொல்வார்கள், அதுதான் சாதாரண மனிதரின் இயல்பு, ஆனால் கவுன்சலிங்க்குப் போகும் அவரிடம்  நடந்தை மறந்துவிடும்படி உளவியலாளர் ஒருவர் சொல்லமாட்டாரே என்ற முரணும் எனக்குத் தெரிந்தது.

சரணடைந்த போராளி ஒருவர் சரணடைந்தமை பற்றி வருத்தப்படும்போது, நீங்களும் என்னதான் செய்வது என டொக்டர் சொல்லும் ஒரு காட்சியைத் தவிர, போராளிகளையோ, இயக்கங்களையோ சம்பந்தப்படுத்தாததும் திரைப்படத்தின் ஒரு சிறப்பெனலாம். பொதுவானதொரு கதையாக இருப்பதால் சிறந்ததொரு ஆவணப்படுத்தலாக இது அமையும்.

ஆமி வன்புணர்வு செய்யும் கதைகளை எழுத்துக்களாகவும் காட்சிகளாகவும் அதிகம் பார்த்திருக்கிறோம். இதில் வித்தியாசமாக ,புலியைப் பிடித்தோமெனக் காட்டுவதற்காகப் பலவந்தமாக இளம் பெண்களை ஆமி கைப்பற்றி அந்த உடைகளை அணியச் செய்வதும் காட்டப்பட்டிருந்தது.

மொத்தத்தில் காட்சியமைப்பு, குறியீடுகள், நடிப்பு என படம் நன்றாக இருந்தது. இயக்குநருக்கு இது முதல் படமென நினைக்கிறேன், அவ்வகையில் இன்னும் அதிகம் அவரிடம் எதிர்பார்க்கலாமென்பது தெரிகிறது. சிங்களத்தில் பேசப்பட்டவைக்கு caption இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், வருங்காலத்தில் ஆங்கில caption உடன் இந்தப் படம் பரவலாகத் திரையிடப்பட வேண்டும்.

இந்தக் கதையைப் படமாக்க வேண்டுமென நினைத்து இப்படிச் சிறப்பாகப் படமாக்கிய இயக்குநர் தனேஷ் கோபாலுக்கும் அவரின் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அவர்களுக்கு ஆதரவுகொடுக்க வேண்டியது எங்கள் அனைவரினதும் தார்மீகக் கடமை ஆகும்.

 

 

Leave a Reply